
இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் அபாரமான கம்பேக் கொடுத்து 412 ரன்கள் சேர்த்தது.
ஏனெனில் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என டாப் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் ஆரம்பகட்ட தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என ஆரம்பத்திலேயே இந்தியா திணறியது. அப்போது 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிதானமாகவும் அதிரடியாகவும் 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூழ்கிய இந்தியாவை நங்கூரத்தை போட்டு தூக்கி நிறுத்தினர். அதில் 89 பந்துகளில் சதமடித்த ரிஷப் பண்ட் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி அவுட்டானார்.
இந்தியா அசத்தல்:
அவருடன் 2-வது நாள் வரை தொடர்ந்து மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக சதமடித்து 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற மெகா உலக சாதனை படைத்தார். மறுபுறம் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு பந்துவீச்சில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84/5 என்ற நிலைமையில் இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக நேற்றைய போட்டியில் மழையால் பெரும்பாலான ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாள் போட்டிக்குப் பின் வழக்கமாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து சார்பில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டியளித்தார்.
2014 சம்பவம்:
அதில் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் ரவிந்திர ஜடேஜாவின் சதம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு. “கடந்த காலங்களில் 8-வது பேட்ஸ்மேனாக டெயில் எண்டர்களுடன் பேட்டிங் செய்த அவர் குறைந்தளவு ரன்கள் மட்டுமே எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது 7-வது இடத்தில் வாய்ப்பை பெற்றுள்ள அவர் முழு தரமான பேட்ஸ்மேனை போல பேட்டிங் செய்கிறார். எங்களின் பல தரமான பந்துகளை அடிக்காமல் விட்டு அழுத்தத்தை கொடுத்த அவர் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தார்” என்று பாராட்டிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் கடந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டிரென்ட் பிரிட்ஜ் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பெவிலியனுக்குள் ஜடேஜாவுக்கும் அண்டர்சனுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. அதில் ஜடேஜாவை ஆண்டர்சன் கீழே தள்ளிவிட்டார் என இந்திய அணி நிர்வாகம் சார்பில் புகார் எழுப்பப்பட்டது அந்த சமயத்தில் அதிர்ச்சியாக அமைந்தது. அதை விசாரித்த ஐசிசி இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் லெவல் 3 குற்றப்படி தண்டனை வழங்கியது. அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டில் இன்னும் அது ஒரு சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது.
நண்பர்களாக:
அப்படிப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா சார்பில் செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திர ஜடேஜாவிடம் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டி பேசியதை செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஜடேஜா பேசியது பின்வருமாறு. “நீங்கள் ரன்கள் அடித்தால் அனைவருமே உங்களை முழு தரமான பேட்ஸ்மேன் என்று கூறுவார்கள். அந்த வகையில் நான் எப்போதும் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவிக்க முயற்சித்து வருகிறேன். அந்த நிலைமையில் 2014 நிகழ்வுக்கு பின் ஆண்டர்சன் அதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ஆண்டர்சனின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசினார்.
இதையும் படிங்க : IND vs ENG : மீண்டும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக நிரூபித்த ஜடேஜா – டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 அபார சாதனைகள்
மொத்தத்தில் ஒரு காலத்தில் சரியான புரிதல் இல்லாமல் ஏற்பட்ட சண்டையால் அதன்பின் கடந்த பல வருடங்களாக மனஸ்தாபத்தில் இருந்து வந்த இந்த 2 இங்கிலாந்து வீரர்களும் தற்போது பழைய சண்டைகளை மறந்து நண்பர்களைப் போல் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொண்டுள்ளது இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.