இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களில் தொடர்ச்சியாக நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே அதே போல இத்தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை 2012க்குப்பின் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.
புதிய வெறித்தனம்:
இந்நிலையில் இதற்கு முன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் இங்கிலாந்து சாதாரண டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுவதால் இம்முறை இந்தியாவில் விளையாடுவது தமக்கு புதிய ஆர்வத்தையும் வெறித்தனத்தையும் கொடுப்பதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
அதை விட 2022இல் கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற சூழ்நிலைகள் இருக்கக்கூடிய பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தோற்கடித்தது இங்கிலாந்துக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் ஆண்டர்சன் கூறியுள்ளார். எனவே இம்முறை அதிரடியாக விளையாடி உங்களை சாய்க்க வருகிறோம் என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“இதற்கு முந்தைய பயணங்களைவிட தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் இதற்கு முந்தைய சுற்றுப்பயணங்களில் நாங்கள் மெதுவாக விளையாட முயற்சிப்போம். கடந்த 2 வருடங்களாக நாங்கள் அதே வழியில் விளையாட முயற்சிக்கிறோம். ஆனால் அதில் சாதுரியமாக இருக்கிறோம். யாருமே நாங்கள் பாகிஸ்தானில் என்ற 3 – 0 கணக்கில் வெல்வோம் என்று எதிர்பார்க்கவில்லை”
இதையும் படிங்க: 174 ரன்ஸ் சேசிங்.. சொதப்பிய மேத்யூஸ்.. கையில் வைத்திருந்த இலங்கையின் வெற்றியை ஜிம்பாப்வே பறித்தது எப்படி?
“அந்த வெற்றி எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அங்குள்ள சூழ்நிலைகள் தான் ஏறத்தாழ இந்தியாவிலும் இருக்கும். இருப்பினும் மெதுவாக இருக்கக்கூடிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்தியா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாடு கிடையாது. ஆனால் ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன். எனவே அவை அனைத்தையும் இம்முறையும் நான் முயற்சிக்க உள்ளேன்” என்று கூறினார். இருப்பினும் 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்த தார் ரோட் பிட்ச்கள் இந்தியாவில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.