
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 37, நித்திஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் 4 விக்கெட்களை எடுத்தார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆரம்பம் முதலே நங்கூரமாக பேட்டிங் செய்தனர்.
அதில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் நேர்த்தியாக விளையாடினார். அதேபோல சுமாரான பார்மில் இருக்கும் ராகுல் அவருடன் சேர்ந்து தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். நேரம் செல்ல செல்ல நல்ல பந்துகளை மதித்து சுமாரான பந்துகளை அடித்த அந்த ஜோடி இரண்டாவது நாளில் அரை சதம் அடித்து அவுட்டாகாமல் அசத்தியது.
இன்று தொடர்ந்து மூன்றாவது நாளிலும் அசத்திய அந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அபாரம் நிகழ்த்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ராகுல் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற மாபெரும் சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
அத்துடன் ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சுனில் கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் சாதனையையும் அந்த ஜோடி உடைத்துள்ளது. இதற்கு முன் 1986ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் அவர்கள் 191 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெறும் போட்டியில் ஜெய்ஸ்வால் 141* ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க:
அவருடன் சேர்ந்து விளையாடும் படிக்கள் 25 ரன்கள் எடுத்துள்ளார். அதனால் மூன்றாவது நாள் உணவு இடைவெளியில் 275 ரன்கள் குவித்துள்ள இந்தியா மொத்தம் 321 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது.