இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் டி20 தொடரில் சிறப்பான ஆட்டம் என தொடர்ச்சியாக ரன் குவித்து வந்த ஸ்டீவ் ஸ்மித் தனக்கே உரித்தான பாணியான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கடுமையாக நோகடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் எதிர்பார்த்தபடி இல்லாமல் முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து நான்கு இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே அவர் அடித்திருந்தார். இந்நிலையில் சற்று சிறிய அழுத்தத்துடன் மூன்றாவது போட்டியை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தனது பார்முக்கு திரும்பியுள்ளார். அஸ்வினுடைய பந்துவீச்சு சிறப்பாக எதிர்கொண்ட ஸ்மித் இம்முறை அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மொத்தம் 226 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் இவரது விக்கெட் விழவே விழாது என்று எதிர்பார்த்த நிலையில் பந்துவீச்சாளர்கள் மூலம் விக்கெட் கிடைக்காமல் ரன்அவுட் மூலம் அவரது விக்கெட் விழுந்தது. பந்தை அடித்துவிட்டு ஓடிய ஸ்மித் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டார். ஆனால் பந்து ஜடேஜாவை நோக்கி செல்ல புயல் வேகத்தில் ஓடி வந்த ஜடேஜா அதனை எடுத்து சரியான திசையை நோக்கி குறி பார்த்து துல்லியமாக அடித்தார்.
SirJadeja : Run out of Steve Smith.
Treat to watch.#INDvsAUS pic.twitter.com/Kff4f6CNF4
— Gaurav Mishra (@Imkgauravmishra) January 8, 2021
அவரது இந்த அதிவேக த்ரோ மூலம் ஸ்டீவ் ஸ்மித் இறுதியில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரவீந்திர ஜடேஜாவின் இந்த த்ரோவை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.