இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்தது. இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 17-ஆம் தேதி அடிலைட் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது.
இந்தப் போட்டிக்குப் பின்னர் விராட் கோலி நாடு திரும்புவதால் இந்த தொடர் மீது உள்ள எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் முதல் டி20 போட்டியின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து தலையில் பலமாக அடிவாங்கினார்.
இதன் காரணமாக ஜடேஜா கன்கஷன் விதிமுறைப்படி அந்தப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அந்த போட்டியில் விளையாடினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் இன்றைய போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி கண்கஷன் விதிமுறைப்படி தலையில் அடிபட்ட வீரர் குறைந்தது பத்து நாட்களுக்காவது ஓய்வெடுக்க வேண்டும்.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடைபெறும் பயிற்சி போட்டியில் அவரால் விளையாட முடியாது. அதன் காரணமாக பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் சிவப்பு நிறத்தில் பயிற்சி செய்யாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் ஆடுவது என்பது வாய்ப்பில்லை என்கிற காரணத்தால் முதல் போட்டியை ஜடேஜா தவற விட அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்வரை எதுவும் உறுதி செய்யப் படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் முழுநேர பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தேவைப்படும் பொழுது 50 ரன்கள் வரை அடிக்கும் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் என்பதால் அது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பு என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் மிக சிறப்பான பார்மில் உள்ள ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.