ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. அந்த நிலையில் கடைசிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 384 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 160, ஹாரி ப்ரூக் 84, ஜேமி ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 567 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 138, டிராவிஸ் ஹெட் 163, பியூ வெப்ஸ்டர் 71* ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
அரிதான சாதனை:
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 183 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 1, ஜோ ரூட் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் துவக்க வீரர் பென் டக்கெட் பொறுப்பாக விளையாட முயற்சித்து 42 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஜேக்கப் பெத்தல் நங்கூரமாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஹாரி ப்ரூக் 4வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 42 ரன்களை குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 0, ஜேமி ஸ்மித் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1, பிரைடன் கார்ஸ் 16 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மறுபுறம் மிகவும் பொறுப்புடன் விளையாடிய ஜேக்கப் பெத்தல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து அசத்தினார்.
வெற்றி யாருக்கு:
இதுவே முதல் தர கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதமாகும். அதாவது இதற்கு முன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட சதமடிக்காத அவர் தன்னுடைய முதல் சதத்தை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ளார். அதே போல உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சதமடிக்காத அவர் தன்னுடைய முதல் சதத்தை கடந்த 2025 செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் அடித்தார்.
இதன் வாயிலாக தனது முதல் தர சதத்தை சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், முதல் லிஸ்ட் ஏ சதத்தை சர்வதேச ஒருநாள் போட்டியிலும் அடித்த வீரர் என்ற அரிதான உலக சாதனையை ஜேக்கப் பெத்தல் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் கபில் தேவ், வெஸ்ட் இண்டீஸின் மர்லான் சாமுவேல்ஸ், வங்கதேசத்தின் மெஹதி ஹசன், அயர்லாந்தின் குர்ட்டிஸ் கேம்பர் ஆகியோரும் அந்த சாதனையைப் படைத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 393 ரன்ஸ்.. தெ.ஆ அணிக்கு எதிராக பாகிஸ்தானை முந்திய.. இளம் இந்தியா உலக சாதனை ஸ்கோர்
தொடர்ந்து நடைபெறும் போட்டியில் 4வது நாள் முடிவில் 302/8 ரன்களை எடுத்துள்ள இங்கிலாந்துக்கு பெத்தல் 142* ரன்களுடன் களத்தில் இருக்கிறார். தற்சமயத்தில் இங்கிலாந்து 119 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



