ஐசிசி 2026 அண்டர்-19 உலகக்கோப்பை ஜனவரி 15ஆம் தேதி நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் அருகில் உள்ள தெனாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அண்டர்-19 அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.
அந்த நிலையில் கடைசிப் போட்டி ஜனவரி 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு பேனோனி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
மெகா ஓப்பனிங்கில்:
அவருடன் சேர்ந்து விளையாடிய ஆரோன் ஜார்ஜ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய சூரியவன்சி 63 பந்துகளில் சதத்தை அடித்து 9 பவுண்டரி 10 சிக்சர்களை விளாசி 127 (74) ரன்களை குவித்து அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து 227 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஆரோன் ஜார்ஜ் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 16 பவுண்டரிகளுடன் 118 (106) ரன்கள் குவித்து அவுட்டானார். 3வது இடத்தில் நிதானமாக விளையாடிய வேதாந்த் திரிவேதி 34 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் அபிஞான் குண்டு 21, ஹர்பன்ஸ் பங்காலியா 2, அம்பரீஷ் 5, கனிஷ்க் சௌஹான் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
உலக சாதனை ஸ்கோர்:
இருப்பினும் லோயர் ஆர்டரில் அதிரடி காட்டிய முகமது எனான் 28* (19) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து கை கொடுத்த ஹெனில் பட்டேல் 19* (21) ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் இந்தியா 393/7 ரன்களை குவித்தது. இதன் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: 2016 டி20 உலககோப்பை டூ 2026 டி20 உலககோப்பை : நீடித்து இந்திய அணியில் இருக்கும் 2 வீரர்கள் – விவரம் இதோ
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு பீட்டர்மெரிட்ஸ்பர்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அண்டர்-19 அணி 341/8 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த சாதனையை இப்போட்டியில் உடைத்த இளம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. மறுபுறம் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜேசன் ரௌல்ஸ் 2, தாண்டோ சோனி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.



