எங்களோட இந்த படையை உங்க பேட்டிங் தாங்குமா? இந்தியாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் மறைமுக எச்சரிக்கை

Rabada
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதே தெம்புடன் கத்துக்குட்டி அயர்லாந்தை தன்னுடைய 2வது போட்டியில் எதிர்கொண்டு 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இதை தொடர்ந்து இந்தியா தன்னுடைய 3வது போட்டியில் வலுவான தென்னாபிரிக்காவை அக்டோபர் 30ஆம் தேதியன்று எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதில் வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்வதற்கான இந்தியாவின் வாய்ப்பு 90% உறுதியாகி விடும் என்பதால் இப்போட்டியில் வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு முகமது சமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது அனுபவத்தால் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறது.

- Advertisement -

பேட்டிங் தாங்குமா:
இருப்பினும் பேட்டிங் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் அசத்தும் நிலையில் ஓப்பனிங்கில் இடம் வகிக்கும் ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஆகியோர் தான் தடுமாறுகிறார்கள். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தலா 4 ரன்களுக்கு அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியையும் பாரத்தையும் ஏற்படுத்திய அவர்களுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியிலும் அதே சவால் காத்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் போட்டியில் தடுமாறிய சூரியகுமார் உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மன்களுக்கும் ககிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜே, லுங்கி ங்கிடி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் ஏற்கனவே தரமான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ள தங்களது அணியில் இப்போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் வேகத்துக்கு கைகொடுக்கும் என்பதால் மார்கோ யான்சென் போன்ற எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் லன்ஸ் க்ளூஸ்னர் கூறியுள்ளார். அதனால் இப்போட்டியில் தங்களது தரமான வேகப்பந்து வீச்சை சமாளித்தால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இவை அனைத்தும் தென்னாப்பிரிக்க அணியில் ட்வயன் பிரிடோரியஸ் காயமடைந்ததால் யாரை சேர்த்து அணியை சமநிலைப்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்தது. என்னை பொருத்த வரை இந்த கிரிக்கெட் போட்டியின் முடிவு தென் ஆப்பிரிக்காவின் அதிரடியான வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து அமையும். குறிப்பாக பெர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை பார்க்கலாம். அதே போல் சுழல் பந்து வீச்சுத் துறையில் தப்ரிஸ் சம்சி கடந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசியது என்னைக் கவர்ந்தது. வேகப்பந்து வீச்சுக்கு நிகராக அவரும் விக்கெட் எடுக்கும் பவுலராக உள்ளார்”

“மேலும் இந்த உலகக் கோப்பையில் நிறைய அதிர்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் சிறிய அணிகள் பெரிய அணிகளை அசால்ட்டாக தோற்கடிப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் எங்களது அது போன்ற அதிர்ச்சிகளை சந்திக்கும் என்று எனக்கு தோன்றவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல் இந்த வருடம் கடந்த ஜூலை மாதமும் சமீபத்திலும் இந்திய மண்ணில் நடந்த டி20 தொடர்களில் இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா கடும் சவாலை கொடுத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

இதையும் படிங்க : பாபர் அசாம் பக்கா செல்பிஷ் ஃப்ளேயர் எவ்ளோ சொல்லியும் கேட்கல – 2 பாக் ஜாம்பவான்கள் கடும் விமர்சனம்

எனவே இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கை விட பவுலிங் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் லன்ஸ் க்ளூஸ்னர் இப்போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement