தோனி, கோலி மட்டும்தான் ஹீரோக்களா – இந்திய ரசிகர்களை நேரடியாக விளாசிய கம்பீர், நடந்தது என்ன

Gambhir
- Advertisement -

கடந்த 1983இல் கபில் தேவ் தலைமையிலான இந்தியா உலக கோப்பையை வென்றது கிரிக்கெட்டின் பக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த வெற்றியை பார்த்து உத்வேகமடைந்து இந்தியாவுக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் அற்புதமாக விளையாடி கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தினர். அதனால் தேசிய விளையாட்டான ஹாக்கியை மறந்து போகும் அளவுக்கு இந்தியாவின் மூலை முடிக்கிலும் விளையாடப்படும் விளையாட்டாக உருவெடுத்த கிரிக்கெட்டுக்கு கிட்டத்தட்ட பெரும்பாலான இந்தியர்கள் ரசிகர்களாக மாறினர்.

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup

- Advertisement -

ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் உணர்வுடன் கலந்த உயிராக பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தை எரித்தது, வீரர்களின் வீட்டை தாக்கியது போன்ற நிகழ்வுகளிலும் ஈடுபட்டனர் இப்போதும் ஈடுபடுகின்றனர். அதனால் இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதமாக பார்க்கப்படுவதாக வெளிநாட்டவர்கள் கூறுவார்கள். மேலும் தோல்விக்கு அப்படி ரியாக்சன் கொடுக்கும் ரசிகர்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் போது இந்தியாவையும் இந்திய வீரர்களையும் தலையில் வைத்துக் கொண்டாட தயங்கவே மாட்டார்கள்.

அதிலும் நவீன கிரிக்கெட்டில் சினிமா சூப்பர் ஸ்டார்களை மிஞ்சும் அளவுக்கு தேசத்துக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் வீரர்களை தங்களது மனதில் வைத்து ரசிகர்கள் ஹீரோக்களாக கொண்டாடுகின்றனர். முன்னதாக ஒற்றுமை இல்லாததால் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி இந்தியாவை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆண்டதை யாரும் மறக்க முடியாது.

worldcup

தோனி, கோலி ஹீரோக்களா:
அந்த குணம் இந்தியர்களின் இயற்கையிலேயே பிறப்பிலேயே ரத்தத்திலேயே கலந்தது போல் தேசத்துக்காக விளையாடி வெற்றிகளை பெற்று கொடுக்கும் வீரர்களை இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றாக கொண்டாடாமல் அவரால் தான் வெற்றி கிடைத்தது இவரால் தான் வெற்றி கிடைத்தது என்று பல்வேறு தரப்புகளாக ரசிகர்கள் பிரிந்து கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் தோனி தான் பெரியவர் விராட் கோலி தான் பெரியவர் என்று மோதிக்கொள்ளும் ரசிகர்கள் நட்சத்திர அந்தஸ்து பெறாத வீரர்களின் செயல்பாடுகளை அதிகமாக பார்ப்பதில்லை.

- Advertisement -

இந்நிலையில் தோனி, விராட் கோலி மட்டும் தான் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பது போல் ரசிகர்கள் கொண்டாடும் கலாச்சாரத்தை முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பெரிய தலையை இந்திய அணியில் உருவாக்காதீர்கள். பெரிய தலை இந்திய கிரிக்கெட்டாக இருக்க வேண்டுமே தவிர தனி நபராக இருக்க கூடாது. இந்த ஹீரோக்களாக கொண்டாடும் கலாச்சாரம் மற்றொருவர் வரும் போது மறைந்து விடும் என்பதை நினைக்க மாட்டீர்களா? முன்பு எம்எஸ் தோனி இப்போது விராட் கோலி”

Kohli

“விராட் கோலி 100 ரன்கள் அடித்த போது மீரட் எனும் சிறிய ஊரிலிருந்து விளையாடும் இளம் வீரரும் (புவனேஸ்வர்) 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் யாரும் அவரைப் பற்றி பேசவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். வர்ணனையின் போது நான் மட்டும் தான் அதைப் பற்றி பேசினேன். ஆனால் கோலி 100 ரன்கள் எடுத்தது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் இந்தியா இந்த ஹீரோக்கள் கலாச்சாரத்தில் இருந்து வெளிவர வேண்டும்”

- Advertisement -

“இந்திய கிரிக்கெட், அரசியல் அல்லது டெல்லி கிரிக்கெட் என எந்த இடமாக இருந்தாலும் ஹீரோக்களாக கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மாறாக இந்திய கிரிக்கெட்டை மட்டும் கொண்டாட வேண்டும். முதலில் இதை யார் உருவாக்கியது? இதை உருவாக்கியது இருவர்தான். ஒன்று சமூக வலைதளங்களில் இருக்கும் போலியான மனிதர்கள். அங்கு எத்தனை பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு பிராண்ட் உருவாக்கப்படுகிறது. 2வது ஊடகங்கள். ஏனெனில் ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரை மட்டும் பேசும் போது அவர்கள் பிராண்ட்டாகி விடுகிறார்கள்”

Gambhir

“அது 1983இல் தொடங்கியது. ஆனால் நீங்கள் ஏன் தோனியை வைத்து தொடங்குகிறீர்கள்? இது 1983இல் ஆரம்பித்தது. 1983இல் உலக கோப்பையை வென்றபோது அவை அனைத்தும் கபில் தேவை மையப்படுத்தி இருந்தது. 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் தோனியை மையப்படுத்தியது. இந்த கலாச்சாரத்தை யார் உருவாக்கியது? வீரர்கள் உருவாக்கவில்லை அல்லது பிசிசிஐ உருவாக்கவில்லை”

- Advertisement -

“மாறாக 2 – 3 ஒளிபரப்பு நிறுவனங்கள் உருவாக்குகின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட்டை அவர்களால் ஆள முடியாது. இந்திய கிரிக்கெட்டை விளையாடும் 15 பேர் தான் ஆள வேண்டும். மேலும் ஒரு வெற்றியில் அனைவரும் பங்காற்றுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் தான் லாபத்துக்காக ஒரு சிலரை பிராண்டாக உருவாக்குகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் இந்திய செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய – ரோஹித் சர்மா

அதாவது 11 பேர் சேர்ந்து உருவாக்கும் வெற்றியை ஒரு சிலர் மட்டும் பெற்றுக் கொடுத்ததாக கொண்டாடும் ரசிகர்களையும் அவர்களை வைத்து பிராண்டை உருவாக்கி லாபத்தை பார்க்கும் ஒளிபரப்பு நிறுவனங்களையும் கௌதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

Advertisement