வீடியோ : இது தான் என் வாழ்வில் பார்த்ததிலேயே சிறந்த நக்குள் பால் – இந்திய வீரரை மனதார பாராட்டிய டேல் ஸ்டைன்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அஜிங்க்ய ரகானே, பியூஸ் சாவ்லா, மோஹித் சர்மா போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் மீண்டும் அற்புதமாக செயல்பட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அந்த வகையில் டெல்லி அணிக்காக இந்திய சீனியர் வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்து பாராட்ட வைக்கிறது. டெல்லியை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி கடந்த 2007இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

குறிப்பாக 2010 வாக்கில் தோனி தலைமையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா முன்னேறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் மற்றும் 2014 லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியில் அசத்தியதை மறக்க முடியாது. ஆனால் நாளடைவில் சற்று ரன்களை வாரி வழங்கியதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் தொடர் வாய்ப்புகளை இழந்தார்.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
மேலும் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும் பும்ரா, சிராஜ் போன்ற இளம் வீரர்களின் வருகையால் டெஸ்ட் அணியிலும் வாய்ப்பை இழந்த அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலேயே 5 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த டெல்லி அணியில் 6வது போட்டியில் வாய்ப்பு பெற்றார். கொல்கத்தாவுக்கு எதிரான அந்த போட்டியில் 4 ஓவரில் வெறும் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியின் முதல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்தார்.

அதை விட குஜராத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 131 ரன்களை கட்டுப்படுத்தும் போது பாண்டியா 59* (53) ரன்களும் ராகுல் திவாடியா ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 20 (7) ரன்களும் எடுத்ததால் டெல்லியின் வெற்றி கிட்டத்தட்ட பறிபோனது. ஆனால் கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் தேவைப்பட்ட போது தனது அனுபவத்தை காட்டிய இசாந்த் சர்மா அச்சுறுத்தலை கொடுத்த திவாடியாவை அவுட்டாக்கி வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து டெல்லியை 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

குறிப்பாக அந்த போட்டியில் சஹா 0, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான போது வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நங்கூரமாக விளையாட முயற்சித்தார். உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரின் கடைசி நக்குள் பந்தை முற்றிலுமாக கணிக்க தவறி முன்கூட்டியே அடிக்க முயற்சித்து 6 (7) கிளீன் போல்டானார். அதாவது பேட்ஸ்மேன்கள் பார்க்கும் போது வழக்கமான வேகத்தில் வீசுவது போல் தெரிந்தாலும் முதன்மை 2 விரல்களை பந்துக்கு பின்னே வைத்து குறைவான வேகத்தில் வீசுவதே நக்குள் பால் என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் அதிக வேகத்தில் வரும் என்று எதிர்பார்த்து முன்கூட்டியே அடிக்க முயற்சித்த விஜய் சங்கரை கிளீன் போல்ட்டாக்கிய இஷாந்த் சர்மா வரலாற்றில் நான் பார்த்ததிலேயே சிறந்த நக்குள் பந்தை வீசியதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹைதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளர் டேல் ஸ்டைன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். ஆனால் அவர் பாராட்டும் அளவுக்கு மற்ற பவுலர்கள் வீசிய பந்துகளுக்கும் இசாந்த் சர்மா வீசிய பந்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : என் அணியை சீண்டுவது எனது குடும்பத்தை திட்டுற மாதிரி – கோலிக்கு சண்டையில் கம்பீர் கொடுத்த பதிலடி இதோ

அதாவது விஜய் சங்கர் பார்க்கும் போது முதலில் தன்னுடைய 2 முதன்மை விரல்களையும் பந்தின் மேற்புறத்தில் வைத்திருந்த இசாந்த் சர்மா ரிலீஸ் செய்வதற்கு முன்பாக கடைசி நொடியில் 2 விரல்களையும் சீம் பகுதிக்கு பின்னே கொண்டு வந்து மெதுவாக வீசியதே ஸ்டைன் பாராட்டும் அளவுக்கு முக்கிய காரணமாகும். இது போன்ற டெக்னிக் அனுபவம் மற்றும் தொடர் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement