சதத்தை தவறவிட்டது வருத்தம் தான். ஆனாலும் – சொந்த மைதானத்தில் விளையாடியது பற்றி பேசிய – இஷான் கிஷன்

Ishan-Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என சமன் செய்துள்ளது. இதன் காரணமாக நாளை அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் 3 ஆவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை குவித்தது.

Shreyas IND vs SA Sanju Samson Shreyas Iyer

- Advertisement -

பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 6-ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவானின் விக்கெட்டையும், 9-ஆவது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில்லின் விக்கெட்டையும் இழந்தது. இப்படி துவக்க வீரர்கள் இருவருமே 10 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து விட்டதால் இந்திய அணி இந்த சவாலான இலக்கை துரத்துமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மூன்றாவது வீரராக களம் புகுந்த இஷான் கிஷனும் நான்காவது வீரராக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரும் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்கள் இருவரின் அட்டகாசமான ஆட்டத்தால் இந்திய அணி இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 93 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை தவறவிட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது. சொந்த மைதானத்தில் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆரவாரத்துடன் விளையாடிய இஷான் கிஷன் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Ishan Kishan 1

இது குறித்து போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரினை ஒன்றுக்கொன்று என்ற நிலையில் சமன் செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற வாய்ப்பும் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. நான் இந்த வெற்றியில் எனது பங்களிப்பை வழங்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி. இது என்னுடைய சொந்த மைதானம் இங்கு என்னை பார்க்க பல ரசிகர்கள் வந்துள்ளனர். மேலும் நான் பீல்டிங் செய்யும் போது அவர்கள் என்னை இந்த போட்டியில் சதம் அடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

ஆனால் நான் சதத்திற்கு அருகில் வந்து அதனை தவறவிட்டு விட்டேன் இருந்தாலும் எனக்கு அதில் வருத்தம் இல்லை. ஏனெனில் அணியின் வெற்றியில் என்னுடைய பங்களிப்பு இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். நிச்சயம் இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : IND vs RSA : இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல – தோல்வி குறித்து பேசிய கேசவ் மகாராஜ்

நான் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். புதிதாக வரும் பேட்ஸ்மேன்கள் உடனடியாக இந்த மைதானத்தில் ரன்களை குவிக்க முடியாது. எனவே களத்தில் நின்று பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதன்படியே முதலில் என்னை செட்டிலாக்கி கொண்டு அதன் பின்னர் பெரிய பெரிய ஷார்ட் விளையாடினேன் என்று இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement