டிராவிட், ஜெய் ஷா பேச்சை கேட்காத ஸ்ரேயாஸ், இஷான்.. பிசிசிஐ தயார் செய்யும் ஆப்பு.. வெளியாக உள்ள அறிவிப்பு

Shreyas Iyer and Ishan Kishan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎஸ் பரத் பெரிய ரன்கள் எடுக்க தவறினார். அதனால் மூன்றாவது போட்டியில் அவருக்கு பதிலாக இசான் கிசானை தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் கடந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி விலகிய அவர் மேற்கொண்டு எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்தார்.

அதனால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காத இஷான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை துவங்கினார்.

- Advertisement -

பிசிசிஐ முடிவு:
அதனால் நிறைய விமர்சனங்கள் எழுந்த நிலையில் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாக கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் பேச்சையும் கேட்காத இஷான் கிசான் ஜார்கண்ட் மாநில அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. இது ஒருபுறமிருக்க இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் லேசான காயத்தால் வெளியேறினார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து அவருடைய காயத்தை பற்றி பெங்களூருவில் உள்ள என்சிஏவில் சோதனை நிகழ்த்தப்பட்டது. அதில் காயம் குணமடைந்தது தெரிய வந்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காகவும் ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருப்பதாக பிசிசிஐக்கு என்சிஏ மெயில் அனுப்பியது. அதன் காரணமாக பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் மும்பைக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இன்னும் தன்னுடைய காயம் முழுமையாக குணமாகவில்லை என்று சொல்லி அப்போட்டியை புறக்கணித்த அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் டிராவிட் – ஜெய் ஷா ஆகியோருடைய பேச்சுகளை மதித்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிசான் ஆகியோரை 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு மீண்டும் கைகொடுக்கும் ஜெய்ஸ்வால்.. கங்குலியின் 17 வருட சாதனையை உடைத்து தனித்துவமான சாதனை

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் 2023 – 2024 சீசனுக்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலின் வீரர்களை இறுதி செய்துள்ளனர். அதை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும். அந்தப் பட்டியலிலிருந்து பிசிசிஐ அறிவுறுத்தலை கேட்காமல் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement