நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது மார்ச் 23-ஆம் தேதியான இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதிரடியில் அதிரவைத்த இஷான் கிஷன் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 106 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணிக்காக மூன்றாவது வீரராக களமிறங்கிய முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 106 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் 45 பந்துகளில் அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து அசத்தியிருந்தார். கடந்த 2022,23,24 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணிக்காக 15 கோடியே 25 லட்சம் ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட அவர் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் கடந்த ஆண்டு இறுதியில் அந்த அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை சன் ரைசர்ஸ் அணியானது ராகுல் திரிபாதிக்கு பதிலாக அவரை மூன்றாவது இடத்திற்கான சரியான தேர்வாக தங்களது அணிக்குள் கொண்டுவந்தது. 11 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட அவருக்கு இன்று கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பிலேயே சன்ரைசர்ஸ் அணிக்காக அவர் அசத்தலான சதத்தையும் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : 286 ரன்ஸ்.. ராஜஸ்தானை அடித்து நொறுக்கி ஓடவிட்ட ஹைதராபாத் சரவெடி சாதனை.. ஆர்ச்சர் மோசமான சாதனை
அவரது இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியை மன ரீதியில் வருத்தமடைய வைத்திருக்கும். இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட அவருக்கு மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் இந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



