IND vs PAK : பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை தகர்த்த இஷான் கிசான் – முதல் இந்தியராக தனித்துவ சாதனை

Advertisement

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2023 ஆசிய கோப்பையின் முக்கியமான லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 48.5 ஓவரில் போராடி 266 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 11, சுப்மன் கில் 10, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் நெருப்பான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 66/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா 150 ரன்களை கூட தாண்டாது என இந்திய ரசிகர்கள் சோகமடைந்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இஷான் கிசான் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அரை சதமடித்து சரிவை சரி செய்தனர். அதில் முதலாவதாக 50 ரன்கள் கடந்த இசான் கிசான் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 (81) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

காப்பாற்றிய இஷான்:.
அவரை போலவே மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவும் 80 ரன்கள் கடந்ததால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 87 (90) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார். அதைத்தொடர்ந்து 206 ரன்களை துரத்துவதற்காக களமிறங்கிய பாகிஸ்தானை மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்த போட்டியில் கேஎல் ராகுல் காயத்தை சந்தித்து வெளியேறியதால் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் மிகச்சிறப்பாக விளையாடி இந்தியாவை 200 ரன்கள் தாண்ட வைத்து அவமானத்தை சந்திப்பதிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அதிலும் பொதுவாகவே உள்ளூர் முதல் சர்வதேசம் வரை தொடக்க வீரராக விளையாட பழகிய அவர் இந்த போட்டியில் மிடில் ஆடரில் களமிறங்கி சூழ்நிலைக்கேற்றார் போல் தன்னை உட்படுத்திக்கொண்டு மிகச்சிறப்பாக விளையாடியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

அத்துடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்திருந்த அவர் இப்போட்டியையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் 50 ரன்கள் கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்திருந்தார். அது போக ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் 15 சாதனையையும் தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 82 (2023)*
2. எம்எஸ் தோனி : 76 (2008)
3. சுரிந்தர் கண்ணா : 56 (1984)
4. எம்எஸ் தோனி : 56 (2010)

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய இஷான் – பாண்டியா ஜோடி, டிராவிட் – யுவியின் 19 வருட சாதனையை உடைத்து அபாரம்

அதை விட தம்முடைய கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் 52 (46), (55), 77 (64), 82 (81) ரன்களை முறையே 113.04, 100.00, 120.31, 101.23 என 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement