
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததற்கு பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்களின் மோசமான பந்துவீச்சும், இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங்குமே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த போட்டியின் கடைசி நாளில் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக நான்காவது இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய ரன்களை அடிப்பது என்பது அசாத்தியமான ஒன்று. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மொத்தமாகவே 35 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 220 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தார். முதல் இன்னிங்சின் போது 20 ஓவர்கள் வீசிய அவர் ஓவருக்கு 6.40 ரன்கள் என்கிற எக்கானமியுடன் 128 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதேபோன்று இரண்டாவது இன்னிங்சின் போது 15 ஓவர்கள் வீசி 92 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இப்படி இந்த போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அவர் ஒருநாள் போட்டிகளை போன்று ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா குறித்து பேசிய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறுகையில் :
பும்ராவிற்கு டி20 போட்டிகளில் இருக்கும் எக்க்கானமியை இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா விட்டுக் கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இப்படி ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுக்கக் கூடாது. உங்களிடம் நல்ல உயரமும், வேகமும் இருக்கிறது. உங்களது திறமைக்கு ஏற்ப நீங்கள் பந்துவீச வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நிலையாக ஒரே பகுதியில் பந்து வீசினால் நிச்சயம் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். விரைவில் அதை கற்றுக் கொள்ள வேண்டும் என பிரசித் கிருஷ்ணாவிற்கு இர்பான் பதான் அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க : இந்தியா இதை மட்டும் செய்யலன்னா.. நியூசி, ஆஸியை தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி உறுதி.. சாஸ்திரி கவலை
இதை தொடர்ந்து பேசிய மற்றொரு முன்னாள் வீரரான சபா கரீம் கூறுகையில் : பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை விட்டுக் கொடுக்கிறார். இதேபோன்று பந்து வீசினால் அது சிறப்பாக இருக்காது. அவர் தனது லென்த்தை மாற்றி நிலையாக ஒரே இடத்தில் பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக அவர் அதிகளவு உழைக்கவும் வேண்டும் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.