
அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியின் இந்த செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட வேளையில் பந்துவீச்சு யூனிட்டில் முகமது சிராஜ் தனி ஒரு ஆளாக தனது அபரிவிதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்திருந்தார். அதிலும் குறிப்பாக எந்த ஒரு போட்டியிலும் ஓய்வெடுக்காத அவர் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியிருந்தார்.
இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 185.3 ஓவர்கள் பந்துவீசிய முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர் முகமது சிராஜின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் முகமது சிராஜின் அந்த அர்ப்பணிப்பை தனது மகனிடம் கூப்பிட்டு காண்பித்ததாக ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி எல்லா வகையிலும் இங்கிலாந்து அணியை விட சிறப்பாக செயல்பட்டது. அதிலும் குறிப்பாக கடினமான ஆடுகளங்களில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அற்புதமாக இந்திய அணி செயல்பட்டு இருந்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ் தனிநபராக நின்று இந்த தொடரில் பிரமாதமாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக இந்த தொடரின் கடைசி போட்டியின் போது முகமது சிராஜ் இந்திய அணிக்காக முழு மூச்சுடன் பந்துவீசிக் கொண்டிருக்கையில் நான் விளையாடிக் கொண்டிருந்த என் மகனை அழைத்து : முகமது சிராஜ் போன்று அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். ஒரு எளிய ஆட்டோ டிரைவருக்கு மகனாக பிறந்து இவ்வளவு தூரம் அவர் வந்துள்ளார் என்று விவரித்திருந்தேன்.
இதையும் படிங்க : அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்து சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்றால் தற்போதைக்கு இவர்தான் – இர்பான் பதான் பேட்டி
முகமது சிராஜ் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். போட்டியின் கடைசி நாள் அன்றும் சற்றும் வேகம் குறையாமல் 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்துவீசி இந்திய அணியின் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று முழு மனதுடன் உயிரை குடுத்து ஒவ்வொரு பந்தையும் வீசினார் என இர்பான் பதான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.