விமர்சனம் செய்ங்க ஆனா இந்தியாவின் கேப்டன் தோனிக்கு மரியாதை குறைவா இதை செய்யாதீங்க.. இர்பான் பதான் சாடல்

Irfan Pathan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறி வருகிறது. அந்த அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் எம்எஸ் தோனி 43 வயதில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கும் அவர் இதுவரை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யவில்லை.

அதன் காரணமாக காலம் கடந்த வயதில் விளையாடாமல் தோனி ஓய்வு பெற்று வீட்டில் உட்கார வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். மேலும் இது தான் சமயம் என்று தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதாகவும் எதிரணி ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். அதன் உச்சமாக சில ரசிகர்கள் தோனி பற்றி மோசமாக சித்தரித்து மீம்ஸ்களை போட்டு தங்களது வன்மத்தைக் காட்டி வருகிறார்கள்.

- Advertisement -

மேட்ச் வின்னர் தோனி:

இந்நிலையில் தோனி சிறப்பாக செயல்படாமல் போனால் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். மாறாக இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற மேட்ச் வின்னர் மற்றும் ஜாம்பவான் தோனியை மரியாதை குறைவாக பேசாதீர்கள் என்றும் அவர் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். தோனியை விமர்சனம் செய்யுங்கள். அவருடைய புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு நேரடியாக தோனியை விமர்சனம் செய்யுங்கள். தோனி சிறப்பாக செயல்படக்கூடாது என்று விரும்ப மாட்டார். பொதுவாகவே பெரிய வீரர்களை நாம் விமர்சனம் செய்வோம். பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் நாம் விமர்சனம் செய்ய வேண்டும்”

- Advertisement -

மரியாதை முக்கியம்:

“ஏனெனில் ரசிகர்கள் தான் விளையாட்டின் மிகப்பெரிய பங்குதாரர்கள். எனவே விமர்சிப்பதற்கான உரிமை ரசிகர்களுக்கு இருக்கிறது. அதற்காக யாரையும் அவமரியாதை செய்யாதீர்கள். யாரும் கோட்டைத் தாண்டி விமர்சிக்காதீர்கள். எம்.எஸ். தோனி பெரிய வீரர் சாம்பியன் கிரிக்கெட்டர் இந்தியாவின் முன்னாள் கேப்டன். அவரது தலைமையில் நாம் ஏராளமான கோப்பைகளை வென்றுள்ளோம்”

இதையும் படிங்க: சிஎஸ்கே அவ்ளோ மோசமில்ல.. வெற்றிக்கு இதை செஞ்சா போதும்.. புதிய பிளேயிங் லெவனை அறிவித்த தோனி

“அவர் மேட்ச் வின்னர். இருப்பினும் தற்போது அவரால் போட்டியை வென்றுக் கொடுக்க முடியவில்லை. அதற்காக நாம் விமர்சனம் செய்யலாம். ஆனால் சமூக வலைதளங்களில் நான் மீம்ஸ்களை பார்க்கிறேன். தயவு செய்து அதை செய்யாதீர்கள். தோனியின் செயல்பாடுகள் பற்றி நம்பர்களுடன் விமர்சனம் செய்யுங்கள். நானும் அந்த விமர்சனங்களுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் விமர்சனங்களை மரியாதையுடன் செய்யுங்கள். இது தான் அனைவருக்கும் என்னுடைய ஆலோசனை” என்று தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

Advertisement