ஒன்னு முழுசா விளையாட வாங்க.. இல்லனா இந்தியாவுக்கு வராதீங்க.. இர்பான் பதான் விளாசல்

Irfan Pathan 8
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரில் மும்பை, பஞ்சாப், குஜராத் போன்ற அணிகள் சுமாராக விளையாடி ஆரம்பத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேறி விட்டன. மறுபுறம் கொல்கத்தா, ராஜஸ்தான் முதல் 2 அணிகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.

மீதமுள்ள 2 இடத்திற்கு ஹைதராபாத், நடப்புச் சாம்பியன் சென்னை, பெங்களூரு, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகிறது. அதில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளை விட ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக மே 18ஆம் தேதி பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

இந்தியாவுக்கு வராதீங்க:
அந்தப் போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றே சொல்லலாம். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெங்களூரு அணியிலிருந்து வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகிய 2 முக்கியமான இங்கிலாந்து வீரர்கள் வெளியேறியுள்ளனர். அதாவது விரைவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக அவர்கள் வெளியேறியுள்ளது பெங்களூரு அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் மொயின் அலி, ஜோஸ் பட்லர், பில் சால்ட் போன்ற ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து இங்கிலாந்து வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக கூண்டோடு வெளியேறியுள்ளனர். ஆனால் முழுமையாக விளையாடுவதற்கு சம்பளத்தை வாங்கிவிட்டு இப்படி முக்கிய நேரத்தில் வெளியேறுவது சரியல்ல என்று சமீபத்தில் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதனால் இங்கிலாந்து வீரர்களுக்கு சம்பளத்திலிருந்து கணிசமான தொகை அபராதம் விதிக்க வேண்டும் என்று கவாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அத்துடன் முழுமையாக விளையாட அனுமதிக்காத இங்கிலாந்து வாரியத்திற்கு 10% கமிஷன் தொகையையும் பிசிசிஐ கொடுக்கக் கூடாது என்று கவாஸ்கர் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில் மே 15ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் ஜோஸ் பட்லர் இல்லாதது ராஜஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: போட்டியே எனக்கும் பும்ராவுக்கும் தான்.. அந்த சாதனையில் முந்திட்டேன் பாருங்க.. ஹர்ஷல் படேல் பெருமித பேட்டி

அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் ஒன்று இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அல்லது இந்தியாவுக்கு விளையாட வரக்கூடாது என்று விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “ஒன்று முழு சீசனிலும் விளையாடுங்கள் அல்லது வர வேண்டாம்” என்று ஒற்றை வரியில் இங்கிலாந்து வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

Advertisement