ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் நேற்று துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் தோற்கடித்த இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 202/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் ரன்கள் 39 எடுத்தனர்.
அடுத்து விளையாடிய இலங்கையும் 20 ஓவரில் 202/5 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா சதத்தை அடித்து 107, குசால் பெரேரா 58 ரன்கள் எடுத்தார்கள். அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் நெருப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டும் கொடுத்து இலங்கையின் 2 விக்கெட்டுகளையும் எடுத்து மிரட்டினார்.
தரமான அர்ஷ்தீப்:
பின்னர் ஹஸரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே 3 ரன்கள் அடித்த கேப்டன் சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் அப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அர்ஷ்தீப் மிகவும் முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
சமீபத்தில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலராக சாதனைப் படைத்த அவரை கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக விளையாட வைக்காமல் பெஞ்சில் அமர வைத்து வருகிறார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் துல்லியமான யார்கர் பந்துகளை வீசுவதில் ஜஸ்ப்ரித் பும்ரா போல திறமையும் தரத்தையும் கொண்டிருப்பதாக முன்னாள் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். எனவே ஃபைனலில் அவரை பெஞ்சில் அமர வைக்காதீர்கள் என்றும் பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பதான் கோரிக்கை:
இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “முதலில் அர்ஷ்தீப் சிங் பனிக்கட்டியை போன்ற குளிர்ச்சியுடைய வீரராக திகழ்கிறார். அவர் அழுத்தத்தன் கீழ் பந்து வீசும் வாய்ப்பைக் கேட்கிறார். தேவைப்படும் போது பந்து வீசும் அவர் கடைசி ஓவரில் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசினார். அந்தப் பந்துகளை வீசுவதில் அவர் பும்ராவின் தோளுக்கு தோளாக இருக்கிறார். அவர் தரமிக்க பவுலர் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: சர்வதேச டி20 போட்டிகளில் 6 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
“அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டுமென முதல் நாளிலிருந்தே நான் சொல்லி வருகிறேன். ஏனெனில் சில சமயங்களில் இருபுறமும் யார்கர் பந்துகளை வீச வேண்டிய நிலை வரும். அதையே நீங்கள் இன்று பார்த்தீர்கள். ஆனால் ஆழமான பேட்டிங்கை விரும்பும் நம்முடைய அணி சிவம் துபேவை ஆல் ரவுண்டராக பார்க்கின்றனர். ஒருவேளை துபே மீண்டும் விளையாடினால் அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் என்னுடைய அணியில் அவர் இருப்பார்” என்று கூறினார்.



