
இந்திய கிரிக்கெட் அணிக்காக இர்பான் மற்றும் யூசுப் ஆகிய சகோதரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பெருமையைக் கொண்டவர்கள். அதில் இடது கை ஆல் ரவுண்டரான இர்பான் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதை மறக்க முடியாது. வலது கை ஸ்பின் ஆல் ரவுண்டரான யூசுப் பதான் அதிரடியாக பேட்டிங் செய்து அசத்தார்.
குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அவர் சதத்தை அடித்து வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்து 2009ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அப்போட்டியில் 172 ரன்களை துரத்திய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
அப்போது கடைசி நேரத்தில் யூசுப் 22* (10), இர்பான் 33* (16) ரன்கள் அடித்து சாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்த தங்களை நியூசிலாந்தில் நடைபெற்ற அடுத்த தொடரில் கேப்டன் தோனி பிரித்ததாக இர்பான் பதான் கூறியுள்ளார். இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “2009இல் நாங்கள் நியூசிலாந்தில் விளையாடினோம்”
“அதற்கு முன்பாக இலங்கையில் நாங்கள் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தோம். குறிப்பாக ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த சூழ்நிலை காரணமாக, வேறு யாராவது எங்களது இடத்தில் இருந்திருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீக்கப்பட்டிருக்க மாட்டார்கள் ஏனெனில் இலங்கைக்கு எதிராக 27 – 28 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது நாங்கள் வெற்றி பெற்று கொடுத்தோம்”
“ஆனால் நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் நான் முழுவதும் பெஞ்சில் அமர்த்தபட்டேன். அதற்கான காரணத்தை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனிடம் கேட்டேன். நான் ஏதாவது முன்னேற வேண்டியிருந்தால் அதை சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு கேரி 2 பதில் கொடுத்தார். ஒன்று சில விஷயங்கள் என்னுடைய கையில் இல்லை என்று சொன்னார். ஆனால் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது கேப்டன் கையில் இருப்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இந்த வீரர் தான் ஏலம் போவார் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
“அப்போது தோனி கேப்டனாக இருந்தார். அவருடைய முடிவு சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒரு கேப்டனுக்கு தம்முடைய வழியில் அணியை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. 2வது பதில் 7வது இடத்தில் பேட்டிங் ஆல் ரவுண்டர் தேவையென்று கேரி சொன்னார். அதன் காரணமாக என்னுடைய சகோதரர் வாய்ப்பை பெற்றார். ஆனால் இப்போதெல்லாம் 2 ஆல் ரவுண்டர்கள் தேவையா? என்று கேட்டால் மக்கள் இருவரையும் எடுத்துக் கொள்வார்கள்” என்று கூறினார்.