IPL 2023 : ஒரு காலத்துல சிறுத்தை மாதிரி ஓடிய என் நண்பன் இப்போ நொண்டுவதை பார்ப்பது கஷ்டமா இருக்கு – இர்பான் பதான் வேதனை

pathan 1
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை களமிறங்கிய 12 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை 92% உறுதி செய்துள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக மே 10ஆம் தேதியான நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது. அப்போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட திண்டாடினார்.

குறிப்பாக 11 ஓவர்கள் வரை சிக்சர்கள் அடிக்க முடியாமல் தடுமாறிய சென்னைக்கு முக்கிய நேரத்தில் 3 சிக்ஸர்களை அடித்த சிவம் துபே ஓரளவு அழுத்தத்தை உடைத்து 25 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த ராயுடு 23 (17) ரன்களில் அவுட்டான நிலையில் ஜடேஜாவும் அதிரடியாக விளையாட தடுமாறியதால் 16.2 ஓவரில் 126/6 என தவித்த சென்னை 160 ரன்களை தொடுமா என அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது ஸ்மார்ட் வாட்சில் 100 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ஆரவாரம் செய்த செய்த சென்னை ரசிகர்களின் வரவேற்புடன் படையப்பா தீம் மியூசிக்குடன் களமிறங்கிய தோனி 1 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டு 20 (9) ரன்களை 222.22 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார்.

- Advertisement -

வயதான சிறுத்தை:
குறிப்பாக அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறும் பல இளம் வீரர்களுக்கு மத்தியில் 41 வயதிலும் அட்டகாசமாக விளையாடும் அவர் இறுதியில் சென்னை பதிவு செய்த 27 ரன்கள் வித்தியாச வெற்றியில் மீண்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். அப்படி இந்த சீசனில் ஆரம்பம் முதலே கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடும் அவர் சற்று முன்கூட்டியே களமிறங்கினால் இன்னும் நன்கு செட்டிலாகி பெரிய ரன்களை எடுத்து வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.

குறிப்பாக விரைவில் 42 வயதை தொடுவதால் இந்த சீசனுடன் விடைபெறுவார் என்று கருதப்படும் நிலையில் சற்று முன்கூட்டியே விளையாடினால் நாங்களும் தோனியின் பேட்டிங்கை அதிகமாக பார்க்கும் வாய்ப்பை பெறுவோமே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் மின்னல் வேகத்தில் டபுள் ரன்களை எடுக்க ஓடிய தோனி தற்போது வயது காரணமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதுடன் குஜராத்துக்கு எதிரான இந்த சீசனின் முதல் போட்டியிலேயே லேசான காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

அதனால் சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் இதர வீரர்களுக்கு வாய்ப்பளித்து கடைசி நேரத்தில் ஓரிரு பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் பேட்டிங்கை வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அப்படி வலியுடன் தொடர்ந்து விளையாடுவதாலேயே தோனி கடைசி நேரத்தில் களமிறங்குவதாக ஸ்டீபன் பிளெமிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். குறிப்பாக நேற்றைய போட்டியில் கூட முழங்காலில் வலியை குறைக்கும் கட்டுகளைப் போட்டுக் கொண்டு தான் தோனி விளையாடினார்.

அத்துடன் வயதான தம்மை அதிகம் பேட்டிங் செய்ய விடாதீர்கள் என்று இதர பேட்ஸ்மேன்களை கேட்டுக் கொண்டதாகவும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு இந்தளவுக்கு வெற்றியில் பங்காற்றுவதை மகிழ்ச்சியாக செய்வதாகவும் டெல்லிக்கு எதிரான போட்டியின் முடிவில் தோனியே வெளிப்படையாக தெரிவித்தார். இந்நிலையில் பொதுவாகவே சிறுத்தை போன்ற சீறிப்பாயும் வேகத்தில் சிங்கிள், டபுள் ரன்களை எடுக்க ஓடக்கூடிய தோனி தற்போது மெதுவாக நொண்டிக்கொண்டு ஓடுவதை பார்க்கும் போது மனம் உடைவதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் ட்விட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : அம்பயரே ரசிகனாக மாறும் அளவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் அற்புத கேட்ச் பிடித்த இளம் வீரர் – திறமைக்கு பரிசு

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ரன்களை எடுப்பதற்கு தோனி நொண்டிக்கொண்டு ஓடுவதை பார்க்கும் போது எனது நெஞ்சம் உடைகிறது. அவர் சிறுத்தை போல ஓடுவதையே நான் எப்போதும் பார்த்துள்ளேன்” என்று கூறினார். அதற்கு சிறுத்தைக்கும் வயதாவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ரசிகர்கள் முடிந்த வரை தோனியின் கடைசி கட்ட ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்க்கலாம் என்று அவருக்கு பதிலளிக்கின்றனர்.

Advertisement