தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் ஐக்கிய அரபு நாடுகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு கேப்டன் பால் ஸ்டெர்லிங் மற்றும் ராஸ் அடைர் ஆகியோர் தென்னாபிரிக்க பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர். குறிப்பாக பவர் பிளே கடந்து 13 ஓவர்கள் வரை அட்டகாசமாக விளையாடிய இந்த ஜோடி 137 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அயர்லாந்துக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தது.
அடைர் சகோதரர்கள்:
அதில் பால் ஸ்டர்லிங் அரை சதடித்து 52 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து அடித்து நொறுக்கிய ராஸ் அடைர் 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்து 100 (58) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஜார்ஜ் டாக்ரல் 20* (13) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் அயர்லாந்து 195-6 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக வியன் முல்தர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன் பின் 196 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரியான் ரிக்கல்டன் 36 ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரீசா ஹென்றிக்ஸ் 51 (32) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய மேத்யூ பிரட்ஸ்கே 51 (41) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.
அயர்லாந்து சாதனை:
ஆனால் அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்கம் 8, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 9, வியன் முல்தர் 9 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 20 ஓவரில் தென் ஆப்பிரிக்காவை 185-9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அயர்லாந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து புதிய வரலாறு படைத்தது.
இதையும் படிங்க: சாம்சன் வேண்டாம்.. வங்கதேச டி20 தொடரில் ரிங்குவை அங்க எறக்குனா அட்டகாசம் பண்ணிடுவாரு.. சபா கரீம்
இதற்கு முன் விளையாடிய 6 போட்டிகளிலும் சந்தித்த தோல்வி சரித்திரத்தை மாற்றியுள்ள அந்த அணி 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்து தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக மார்க் அடைர் 4, கிரகாம் ஹம் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் சகோதரர்கள் ராஸ் அடைர் 100 ரன்களும் மார்க் அடைர் 4 விக்கெட்டுகளும் எடுத்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து அயர்லாந்து வரலாறு படைக்க உதவியது குறிப்பிடத்தக்கது.



