பாவம் அதிர்ஷ்டமில்லை, பரிதாப்படும் வகையில் மீண்டும் போராடி நூலிழையில் தோற்ற அயர்லாந்து – நடந்தது என்ன?

IRE vs NZ
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது போட்டி ஜூலை 15-ஆம் தேதியான நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அதிரடியாக விளையாடி 360/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 33 (28) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில் எங் 3 (12) ரன்களில் அவுட்டான நிலையில் கேப்டன் டாம் லாதம் 30 (26) ரன்களில் நடையைக் கட்டினார்.

அதனால் 146/3 என அந்த அணி தடுமாறினாலும் மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த நட்சத்திர தொடக்க வீரர் மார்டின் கப்தில் சிறப்பாக பேட்டிங் செய்து 15 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 115 (126) ரன்களில் அவுட்டானார். அவருடன் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய ஹென்ரி நிகோல்ல்ஸ் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 79 (54) ரன்கள் விளாசினார். கடைசியில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் கிளென் ப்லிப்ஸ் 47 (30) ரன்களும் மைக்கேல் ப்ரெஸ்வெல் 21* (16) ரன்களும் மிட்சேல் சாட்னர் 14 (10) ரன்களும் குவித்து பினிஷிங் கொடுத்தனர். அயர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோஸ்வா லிட்டில் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடிய அயர்லாந்து:
அதை தொடர்ந்து 360 என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு கேப்டன் ஆண்டி பால் பிரின்ட் டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய அண்டி மெக்பிரின் 26 (20) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 62/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற தங்களது அணிக்கு மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் உடன் கைகோர்த்த ஹேரி டெக்டர் 3-வது விக்கெட்டுக்கு அதிரடியான 179 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த ஜோடியில் 14 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்த பால் ஸ்டெர்லிங் 120 (103) ரன்கள் விளாசி ஆட்டமிழக்க அடுத்து வந்த கெராத் டிலானி 22 (16) ரன்களிலும் கூர்டிஷ் கேம்பர் 5 (4) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தின.

அந்த சமயத்தில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த ஹேரி டெக்டர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 108 (106) ரன்களில் அவுட்டானது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அதைப் பயன்படுத்திய நியூசிலாந்து அடுத்து வந்த லோர்கன் டூக்கர் 14 (15) ஜார்ஜ் டாக்ரெல் 22 (17) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் கடைசி கட்ட ஓவர்களில் சொற்ப ரன்களில் காலி செய்தது. அந்த பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு அயர்லாந்திடம் 2 விக்கெட் மட்டுமே கையிலிருந்த நிலையில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

1 ரன்னில்:
ப்ளேக் டிஃக்னர் வீசிய அந்த கடைசி ஓவரை எதிர்கொண்ட க்ரேம் ஹும் முதல் பந்தில் ரன்கள் எடுக்காத நிலையில் 2-வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதன்பின் 3-வது பந்தை எதிர்கொண்ட கிரைக் எங் பவுண்டரியை பறக்க விட்டாலும் 4-வது பந்தில் 2 ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். அதனால் கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்து களமிறங்கிய ஜோஸ்வா லிட்டில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது அதை எதிர்கொண்ட கிரேம் ஹும் பெரிய ரன்களை அடிக்க முயன்ற போதும் தவற விட்டு பைஸ் ரன்னாக 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனால் நியூஸிலாந்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

ஒரு கட்டத்தில் பால் ஸ்டர்லிங் மற்றும் டெக்டர் ஆகியோர் சதமடித்ததால் வெற்றி பெறும் நிலையில் இருந்த அயர்லாந்து கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றதால் அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் கண்ணீர் விடாத சோகத்தில் காணப்பட்டனர். ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் கடைசி ஓவரில் 24 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அணி 2-வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

அந்த நிலைமையில் இப்போட்டியில் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய அந்த அணிக்கு அதிர்ஷ்டமின்மையால் மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்ததால் வைட்வாஷ் தோல்வியைக் கூட தவிர்க்க முடியாமல் 3 – 0 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வியடைந்தது.
மேலும் ஏற்கனவே கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டியிலும் 226 ரன்களை துரத்திய அந்த அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றதை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு இதனால் தான் ஆதரவு கொடுத்தேன் – இந்தியர்களை மிஞ்சிய பாபர் அசாம் ஓபன்டாக்

இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் கடுமையாக போராடினாலும் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அதிர்ஷ்டமின்மையால் வெற்றியைத் தவறவிடும் அயர்லாந்தை பார்த்து வீரேந்திர சேவாக் உட்பட பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பரிதாபப்படுகிறார்.

Advertisement