இந்தியாவின் நம்பர் ஒன் வியாபாரமாக ஐபிஎல் பிரமாண்ட வளர்ச்சி – ஒளிபரப்பு உரிம வரலாறு இதோ

IPL 2022 (2)
- Advertisement -

கடந்த 2008இல் 8 அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே முன்னேற்றிக் கொண்டு பல புதிய பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர்-1 டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை விட தரமான தொடர் என்று சுனில் கவாஸ்கர், ஏபி டிவிலியர்ஸ் போன்றவர்கள் பாராட்டும் அளவுக்கு அபார வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் அதை நடத்தும் பிசிசிஐக்கு பணத்தை மழைபோல் கொடுக்கிறது.

- Advertisement -

அதிலும் 2022 வருடம் பிசிசிஐ காட்டில் பணமழை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ 7000+ கோடி குஜராத் 5000+ கோடி ஆகிய புதிய 2 அணிகளின் வாயிலாக மட்டும் 12000க்கும் மேற்பட்ட கோடிகளை பிசிசிஐ கல்லா கட்டியது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரஞ்சு, ஊதா தொப்பிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஸ்பான்சர்ஷிப் என ஸ்பான்சர்ஷிப் வாயிலாக மட்டுமே இந்த வருடம் 1000க்கும் மேற்பட்ட கோடிகளை பிசிசிஐ பெற்றுள்ளது.

ஒளிபரப்பு உரிமம்:
இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஏன் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பிசிசிஐ இன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. அதை நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது என்றே கூறலாம். ஆம் நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறக்கும் ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஒளிபரப்பு ஒப்பந்தம் இந்த வருட ஐபிஎல் தொடருடன் முடிந்தது. அதனால் 2023 – 2027 கால கட்டத்திற்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தை மின்னணு முறையில் கடந்த ஜூன் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் மும்பையில் நடைபெற்றது.

IPL

1. அதை வாங்குவதற்கு சோனி, ஸ்டார் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியிட்டன. அதன் முடிவில் இந்திய துணை கண்டத்தில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமத்தை டிஸ்னி ஸ்டார் குழுமம் 23,575 கோடிக்கு மீண்டும் வாங்கியது.

- Advertisement -

2. ஆனால் இந்திய துணைக் கண்டத்தின் டிஜிட்டல் உரிமத்தை (ஆன்லைன் – மொபைல்) வியாகாம்18 நிறுவனம் 23758 கோடிக்கு வாங்கியது. அதுபோக உலகின் இதர பகுதிகள், எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம்18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 2 நிறுவனங்கள் சேர்ந்து 1057 கோடிக்கு வாங்கின.

IPL-bcci

3. மொத்தமாக 48,390 கோடிகள் என்ற பிரமாண்ட தொகைக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம் போயுள்ளது ஒட்டுமொத்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது கடந்த ஏலத்தில் கிடைத்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

- Advertisement -

ப்ரம்மாண்ட வளர்ச்சி:
1. இதன் வாயிலாக இந்த காலகட்டத்தில் நடைபெறப்போகும் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 107.5 கோடியாக உயர்ந்துள்ளது. அதனால் ஒட்டுமொத்த உலக அளவில் நடைபெறும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற மொத்த விளையாட்டு தொடர்களில் இங்கிலாந்தின் ஈபிஎல், அமெரிக்காவின் எம்பிஏ போன்ற தொடர்களை முந்தியுள்ள ஐபிஎல் உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. என்எப்எல் : 133 கோடி
2. ஐபிஎல் : 107.5 கோடி
3. ஈபிஎல் : 85 கோடி

IPL

2. இதே ஒளிபரப்பு உரிமத்தை ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008இல் முதல் முறையாக 10 வருடங்களுக்கு சோனி நிறுவனம் வெறும் 8200 கோடி வாங்கியது. ஆனால் அந்த 10 வருடங்களில் விண்ணை முட்டும் வளர்ச்சியை கண்டதால் 2018 – 2022 வரையிலான வெறும் 5 வருட உரிமையை ஸ்டார் குழுமம் 16,347 கோடிக்கு வாங்கியது.

- Advertisement -

3. தற்போது அதே ஐபிஎல் மும்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதால் அதே 5 வருட உரிமையை 48390 கோடிக்கு டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 3 நிறுவனங்கள் சேர்ந்து வாங்கியுள்ளன.

IPL vs EPL

ஷேர் மார்க்கெட் பின்னாடி:
மேலும் கடந்த 2008இல் முதல் சீசனில் வெறும் 13.6 கோடியாக இருந்த ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து 107.5 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த பட்டியல்:
1. 13.6 கோடி : 2008, முதல் சீசன்
2. 55 கோடி : 2018, 11-வது சீசன்
3. 107.5 கோடி : 2023, 16-வது சீசன்

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில் 15 – 20 கோடிக்கு வாங்கப்படுவது அதிர்ஷ்டமல்ல, ஆபத்து. ஏன் தெரியுமா? – கபில் தேவ் கருத்து

ஆனால் கடந்த 15 வருடங்களில் ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் அல்லது இந்தியாவில் வியாபார நோக்கில் நடைபெறும் எந்த ஒரு துறையாலும் இந்த அளவு பிரம்மாண்ட வளர்ச்சியில் பாதியை கூட தொட முடியவில்லை. குறிப்பாக சமீபத்தில் எல்ஐசி வெளியிட்ட ஷேட் மார்க்கெட் ஐபிஓ கூட இந்த தொகையை எட்ட முடியவில்லை. இதிலிருந்து ஐபிஎல் என்பது தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் வணிகமாகவும் வியாபாரமாகவும் உருவெடுத்துள்ளதால் ஒரு ஐபிஎல் அணியை வாங்குவது, ஒளிபரப்பு உரிமத்தை வாங்குவது என ஐபிஎல் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பகுதியில் முதலீடு செய்வதற்கு இந்தியாவின் டாப் முதலீட்டாளர்கள் யோசனையின்றி பணத்தைக் கொட்டுகிறார்கள்.

Advertisement