ஐபிஎல் 2023 – 2027 ஒளிபரப்பு உரிமம் ! வாங்கியது யார், எத்தனை கோடி, ரசிகர்கள் இனி எதில் பார்க்கலாம்?

IPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை கோலாகலமாக 65 நாட்கள் பல எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இந்த தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களின் நகத்தை கடிக்க வைத்து எதிர்பாராத திருப்பங்களை கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் சிறந்த தொடரென்று பல ஜாம்பவான்கள் வெளிப்படையாகவே பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

ஒளிபரப்பு ஏலம்:
அதேபோல் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் பணத்தை வருமானமாக கொட்டிக் கொடுக்கும் இந்த தொடரால் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பிசிசிஐ பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது. அதை இன்று நடைபெற்று முடிந்த ஒளிபரப்பு ஏலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது என்றே கூறலாம். ஆம் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நடைபெறக்கூடிய ஐபிஎல் தொடரை மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பி வந்த டிஸ்னி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிந்தது.

அதை தொடர்ந்து 2023 – 2027 காலகட்டத்திற்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் மின்னணு முறையில் நடைபெறும் என கடந்த மாதம் அறிவித்த பிசிசிஐ அதற்காக சம்பந்தப்பட்ட டாப் நிறுவனங்களை அழைத்தது. அதைத்தொடர்ந்து அதற்கான ஏலம் ஜூன் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் சோனி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ரிலையன்ஸ் வியாகாம்18 போன்ற முன்னணி நிறுவனங்கள் உரிமத்தை கைப்பற்ற கடும் போட்டியிட்டனர். அதன் முடிவில் யார் வென்றுள்ளார்கள் என்று பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி:

- Advertisement -

1. பேக்கேஜ் 1: இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த நாடுகளில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமையை டிஸ்னி ஸ்டார் குழுமம் 23,575 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தமாக நடைபெறப்போகும் 410 போட்டிகளை அந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2. பேக்கேஜ் 2: இந்திய துணை கண்டத்தை தேர்ந்த நாடுகளில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் டிஜிட்டல் (ஆன்லைன் மற்றும் மொபைல்) உரிமத்தை ரிலையன்ஸ் வியாகாம்18 நிறுவனம் 20,500 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனமும் இந்த காலகட்டத்தில் நடைபெறும் 410 போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது. இப்படி ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை 2 வெவ்வேறு நிறுவனங்கள் வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

3. பேக்கேஜ் 3: இந்தியாவில் ஒளிபரப்ப கூடிய எக்ஸ்குளுசிவ் அல்லாத தருணங்களை 2991 கோடிக்கு ரிலையன்ஸ் வியாகாம்18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த உரிமத்தில் பிளே ஆஃப் போன்ற 98 போட்டிகள் அடங்கும்.

4. பேக்கேஜ் 4: இந்திய துணைக் கண்டத்தை தவிர உலகின் ஏனையப் பகுதிகளில் ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய 2 உரிமங்களையும் ரிலையன்ஸ் வியாகாம்18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 2 நிறுவனங்கள் சேர்ந்து 1324 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த உரிமைகளும் வழக்கம்போல 410 போட்டிகள் அடங்கும்.

- Advertisement -

5. இந்த மொத்த உரிமமும் சேர்த்து 48,390 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலம் போயுள்ளது. இந்த கடந்த 2018இல் நடைபெற்ற ஏலத்தை விட இது 3 மடங்கு அதிகமாகும். அதேபோல் இந்த காலகட்டத்தில் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 107.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2018ல் வெறும் 55 கோடியாக இருந்தது.

6. இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலகில் நடைபெறும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற உலகின் டாப் விளையாட்டு பட்டியலில் ஈபிஎல், எம்பிஎல், என்பிஏ போன்ற இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் நடைபெறும் முன்னணி விளையாட்டுப் போட்டிகளையும் முந்தியுள்ள ஐபிஎல் உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு தொடராக அவதரித்துள்ளது. முதலிடத்தில் என்எஃப்எல் உள்ளது.

விரிவடையும் ஐபிஎல்:
2023 – 2027 காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ ஏலதாரர்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆனால் இந்த வருடம் நடைபெற்ற 74 போட்டிகளின் படி 370 போட்டிகள் மட்டுமே கணக்கு வருகிறது. அப்படியானால் வரும் காலங்களில் 84 அல்லது 94 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் விரிவடைந்து நடைபெறப்போவது இதன் வாயிலாக அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : வாழ்வா – சாவா போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வீசிய இந்தியா, வெற்றி பெற்றது எப்படி – தொடரை வெல்லுமா

எதில் பார்க்கலாம்:
இந்த ஏலத்தின் படி இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் வரும் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் வழக்கம்போல ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்க முடியும். ஆனால் டிஜிட்டல் உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் வாங்கியுள்ளதால் அதன் “வூட் மொபைல் ஆப்” வாயிலாகத்தான் இனி ரசிகர்கள் மொபைல் மற்றும் ஆன்லைன் வாயிலாக பார்க்க முடியும்.

Advertisement