IND vs RSA : வாழ்வா – சாவா போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வீசிய இந்தியா, வெற்றி பெற்றது எப்படி – தொடரை வெல்லுமா

IND vs RSA Harshal Patel
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா சொந்த மண்ணில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத தருணத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அதனால் இந்த தொடரை வெல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலைமையில் ஜூன் 14-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் துவங்கிய 3-வது போட்டியில் இந்தியா களமிறங்கியது.

- Advertisement -

அதில் மீண்டும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து சரவெடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜெ வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை பறக்கவிட்ட ருதுராஜ் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் கொடுத்தார். 10 ஓவர்கள் வரை தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 57 (35) ரன்கள் குவித்த ருதுராஜ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

இலக்கு 180:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 14 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த இஷான் கிசான் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (35) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 6 ரன்களில் அடுத்தடுத்து இடைவெளிகளில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

pandya 1

அதனால் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியாவிற்கு நல்லவேளையாக கடைசி நேரத்தில் 4 பவுண்டரி பறக்கவிட்ட ஹர்டிக் பாண்டியா 31* (21) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 179/5 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பாவமா 8 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 23 (20) ரன்களிலும் டுவைன் பிரெடோரியஸ் 20 (16) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அந்த அளவுக்கு பவர்பிளே ஓவர்களில் அசத்தலாக பந்துவீசிய இந்தியா அடுத்து வந்த வேன் டெர் டுஷனை 1 (4) ரன்னில் அவுட்டாக்கி பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் டேவிட் மில்லரை 3 (5) ரன்களில் காலி செய்தது.

Bhuvaneswara Kumar

இந்தியா வாழ்வு:
அதனால் 11 ஓவரில் 71/5 என சரிந்த அந்த அணிக்கு அடுத்து வந்த வேன் பர்ணல் 2 பவுண்டரியுடன் 22* (18) ரன்கள் எடுத்து போராடினாலும் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19.1 ஓவரில் 131 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், சஹால் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் 48 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இந்த முக்கியமான வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வைக் கண்டது.

இதற்கு முந்தைய போட்டிகளில் பந்து வீச்சுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் இம்முறை தங்களால் தான் இந்தியா தோல்வியடைந்தது என்ற பொறுப்பை உணர்ந்த இந்திய பவுலர்கள் பவர்ப்ளே ஓவர்களில் டாப் ஆர்டரை காலி செய்து 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அத்துடன் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை செட்டாக விடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்துக் கொண்டே இருந்தனர். குறிப்பாக கடந்த போட்டிகளில் தோல்வியை பரிசளித்த வேன் டெர் டுஷன், மில்லர், க்ளாஸென் ஆகியோரை இம்முறை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் ஆரம்பத்திலேயே காலி செய்தனர். மேலும் கடந்த போட்டிகளில் இந்தியாவின் சுழல் பந்து வைத்து படுமோசமாக இருந்தது.

IND vs RSA Chahal Axar Patel

அதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சஹால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இம்முறை பொறுப்புடனும் அபாரமாகவும் பந்தைச் சுழற்றி இந்தியாவின் பக்கம் வெற்றியை திரும்ப வைத்தனர். அதேபோல் இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களை வீணடிக்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர்களும் கச்சிதமாக பந்துவீசி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் இன்னும் இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் கடைசி 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே சொந்த மண்ணில் கோப்பையை வென்று தலைநிமிர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Advertisement