எளிய இலக்கானாலும் கடைசி வரை போராடிய சென்னை – அசால்ட்டாக சாய்த்த தமிழக வீரர், நடந்தது என்ன?

Yashsvi Jaiswal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிய நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி போட்டியில் 3-வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தானை எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் முதல் ஓவரிலேயே 2 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அதனால் 2/1 என தடுமாறிய சென்னையை அடுத்து களமிறங்கிய மொயின் அலி அதிரடியாக மீட்டெடுக்கும் வகையில் பட்டாசாக பேட்டிங் செய்து பவர்பிளே ஓவர்களில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் தெறிக்க விட்டார். அடுத்த ஒரு சில ஓவர்களில் ரன் மழை பொழிந்த அவர் டிரென்ட் போல்ட் வீசிய ஒரே ஓவரில் 6, 4, 4, 4, 4, 4 என 26 ரன்களை விளாசி எரிமலையாய் பேட்டிங் செய்தார்.

- Advertisement -

சொதப்பிய சென்னை:
2-வது விக்கெட்டுக்கு அமைக்கப்பட்ட 83 பார்ட்னர்ஷிப் ரன்களில் எதிர்ப்புறம் வெறும் பெயருக்காக நின்று கொண்டிருந்த டேவோன் கான்வே 16 (14) ரன்களில் ஆட்டமிழந்தார் என்றால் மொயின் அலி எவ்வளவு மிரட்டலாக பேட்டிங் செய்திருப்பார் என்று பாருங்கள். அதிலும் வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் ஒருபுறம் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஜெகதீசன் 1 (4) ராயுடு 3 (6) என முக்கிய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதனால் 95/4 என சரிந்த சென்னைக்கு அதிரடி காட்டிய மொய்ன் அலிக்கு கைகொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த கேப்டன் தோனி மெதுவாக பேட்டிங் செய்து 26 (28) ரன்களில் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த மொயின் அலி போராடி 13 பவுண்டரி 3 சிக்சருடன் 93 (57) ரன்களில் சதமடிக்க முடியாமல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதர பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவர்களில் சென்னை 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் முதல் 6 ஓவர்களில் 75/1 ரன்கள் எடுத்த சென்னை அடுத்த 14 ஓவர்களில் 75/5 ரன்களை மட்டுமே எடுத்து மொயின் அலி கொடுத்த அற்புதமான தொடக்கத்தை பயன்படுத்தாமல் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது. அந்த அளவுக்கு கடைசி 14 ஓவர்களில் அற்புதமாக பந்துவீசி மடக்கிப் பிடித்த ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் மற்றும் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் வெற்றி:
அதை தொடர்ந்து 151 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் வெறும் 2 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனால் 16/1 என தடுமாறிய அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி காட்ட அவருடன் கை கொடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மெதுவாக பேட்டிங் செய்து 15 (20) ரன்களில் வெளியேறினார். அப்போது களமிறங்கிய தேவ்தூத் படிக்கல் 3 (9) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 15-வது ஓவரில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (44) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையர் 6 (7) ரன்களில் அவுட்தானதால் போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சென்னையில் பிறந்த தமிழகத்தின் அஷ்வின் சென்னைக்கு எதிராக அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

குறிப்பாக கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசி வரை நின்று 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 40* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரசாந்த் சோலங்கி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

சாய்த்த அஷ்வின்:
இப்போட்டியில் பேட்டிங்கில் மொயீன் அலிக்கு இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுத்து 20 – 30 ரன்கள் எக்ஸ்ட்ராவாக எடுத்திருந்தால் நிச்சயம் சென்னை வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு போராடிய அந்த அணியை யாருமே எதிர்பாராத வகையில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரான தமிழகத்தின் அஸ்வின் தனது அபார திறமையை வெளிப்படுத்தி தோற்கடித்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

இதனால் 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் லக்னோவை 3-வது இடத்திற்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் வரும் மே 24-ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் முதலிடம் பிடித்த குஜராத்தை அந்த அணியை எதிர்கொள்கிறது. மறுபுறம் பங்கேற்ற 14 போட்டிகளில் 10-வது தோல்வியை பதிவு செய்த சென்னை கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை கூட பெற முடியாமல் பரிதாபமாக 9-வது இடத்தை பிடித்தது. ஒருவேளை நாளைய போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடித்தால் 10-வது இடத்தை பிடிக்க வேண்டிய பரிதாபம் ஏற்பட உள்ளது.

Advertisement