
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைக்க உள்ளது.
இந்த வருடம் மார்ச் 26 முதல் மே 22 வரை முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
எம்எஸ் தோனி – மாஸ்டர் ஆஃப் பினிஷிங்:
ஐபிஎல் தொடரில் சமீப காலங்களாக ஒரு அணியின் பெரும்பாலான ரன்கள் கடைசி கட்ட ஓவர்களில் தான் அடிக்கப்படுகின்றன. அதாவது பவர்பிளே ஓவர்களில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் குவிப்பது என்பது அனைத்து போட்டிகளிலும் எல்லா அணிகளுக்கும் சாத்தியமாக அமைவதில்லை. இப்போதெல்லாம் பெரும்பாலான அணிகள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளிக்காமல் நிலைத்து நின்று விளையாடினால் கடைசி 5 – 10 ஓவர்களில் தேவையான ரன்களை எடுத்துக் கொள்ளலாம் என்ற மன நிலைமையில் விளையாடுகின்றன.
இந்த நிலைமை காரணமாக சமீப காலங்களில் நடந்த ஐபிஎல் தொடர்களில் ஆரம்பத்தில் மோசமான தொடக்கத்தை பெற்ற எத்தனையோ அணிகள் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை விளாசி இறுதியில் வெற்றியும் பெறுகின்றன. கிரிக்கெட்டில் இதுபோல பயன்படுத்தப்படும் யுக்தியை பினிஷிங் என வல்லுநர்கள் அழைப்பார்கள். இந்த யுக்தி ஆரம்ப காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டது என்றாலும் அதை களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் பயன்படுத்திய பிரபலப்படுத்தியவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி ஆவார்.
ஆம் சமீப காலங்களாக ஆரம்பத்தில் விக்கெட்டுகளை விடாமல் நிலைத்து நின்று விளையாடினால் கடைசி நேரத்தில் ரன்களை அடிக்கலாம் என்ற மன நிலைமை ஐபிஎல் மட்டுமல்ல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் வந்துவிட்டது. அதற்கு காரணம் எம்எஸ் தோனி என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில் பொதுவாகவே மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் அவர் இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி தனி ஒருவனாக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற வைத்ததை அனைவரும் அறிவார்கள். அதன் காரணமாக கிரிக்கெட்டின் ஒரு மகத்தான பினிசர் என்று அனைவராலும் அவர் போற்றப்படுகிறார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அபார பினிஷிங் செய்து சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றது முதல் 2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடி பினிஷிங் கொடுத்து இந்தியாவிற்காக கோப்பையை பெற்றுக் கொடுத்தது வரை அவர் பினிஷிங் செய்த எத்தனையோ ஆட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதை பார்த்து இப்போது பெரும்பாலான அணிகளும் வீரர்களும் அதை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பினிஷிங் செய்யும் அவரின் திறமையை மேலும் வெளிக்கொணரும் வண்ணமாக இப்போது ஒரு புள்ளிவிவரத்தை பற்றி பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை நடந்த போட்டிகளில் ஒவ்வொரு ஓவர்களிலும் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.
1. ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 404 ரன்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.
2. அதேபோல் 2, 3, 4 ஆகிய ஓவர்களில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் முறையே 535, 575, 498 ரன்களை குவித்து முதலிடம் பிடிக்கிறார்.
3. பவர்பிளே ஓவரின் கடைசி கட்ட ஓவர்களான 5 மற்றும் 6 ஆகிய ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 475 மற்றும் 462 ரன்களை குவித்துள்ளார்.
4. 7-வது ஓவரில் இந்திய நட்சத்திரம் ஷிகர் தவான் 325 ரன்களும் 8-வது ஓவரில் விராட் கோலி 359 ரன்களும் குவித்து முதலிடம் பிடிக்கிறார்கள்.
5. 9, 10, 11 ஆகிய ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா முறையே 363, 369, 391 ரன்களை விளாசியுள்ளார்.
6. 12 மற்றும் 13 ஆகிய ஓவர்களில் மீண்டும் விராட் கோலி முறையே 380 மற்றும் 347 ரன்களுடன் முதலிடம் பிடிக்கிறார். 14-வது ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 385 ரன்களை அதிகபட்சமாக விளாசியுள்ளார்.
7. அதன்பின் தொடங்கும் கடைசி கட்ட ஓவர்கள் என அழைக்கப்படும் 15, 16, 17, 18, 19, 20 ஆகிய 6 ஓவர்களில் எம்எஸ் தோனி ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்றே கூறலாம். ஆம் பொதுவாகவே கடைசி கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணி கேப்டன்களும் அதன் தரமான பந்துவீச்சாளர்களை களமிறக்குவார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு எதிராக அழுத்தம் நிறைந்த கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன்களை குவித்தது என்பது சுலபமான காரியமல்ல.
8. ஆனால் அதை வரலாற்றில் பல முறை எம்எஸ் தோனி செய்து காட்டியுள்ளதால் தான் அவரை இங்கே மாஸ்டர் ஆஃப் பினிஷிங் என அழைக்கிறேன். அதில் எந்த தவறும் இல்லை என்றும் நினைக்கிறேன். அதற்கு சான்றாக ஐபிஎல் வரலாற்றில் 15, 16, 17, 18, 19, 20 ஆகிய கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி முறையே 442, 476, 572, 596, 599, 610 ஆகிய ரன்களைக் குவித்துள்ளார்.
வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் பினிஷிங் கலையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றால் எம்எஸ் தோனி அதை அதிக அளவு உபயோகித்து நவீன கிரிக்கெட்டின் அடிப்படை இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு பிரபலப்படுத்தியவர். அதன் காரணமாகவே கிரிக்கெட் இருக்கும் வரை ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா அல்லது இன்னும் எத்தனையோ பினிஷர்கள் உருவானாலும் எம்எஸ் தோனி மாஸ்டர் ஆஃப் பினிஷர் என அழைப்பதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.