ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரில் லக்னோ மற்றும் குஜராத் உள்ளிட்ட புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

வழக்கம் போலவே இந்த வருட ஐபிஎல் போட்டிகளும் ரசிகர்களுக்கு பரபரப்பான திரில்லர் விருந்தாக அமைந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா மோதிய முதல் போட்டியை தவிர ஏனைய போட்டிகள் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
காலைவாரும் வெளிநாட்டு வீரர்கள்:
முன்னதாக இந்த ஐபிஎல் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென விலகியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக குஜராத் அணிக்காக 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்தின் நட்சத்திர அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் தனது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட விரும்புவதாக கூறிவிட்டு திடீரென விலகினார்.

அதேபோல் ஐபிஎல் தொடரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து விளையாட விரும்பவில்லை என்ற காரணத்துக்காக கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் திடீரென விலகினார். ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இப்படி திடீரென இந்த வீரர்கள் விலகியது அவர்களை வாங்கிய அணிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் காரணமாக திடீரென அவருக்கு நிகரான வேறு ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அந்த அணி நிர்வாகங்கள் தள்ளப்பட்டன.
ஸ்ட்ரிக்ட் ரூல்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுபோல நியாயமற்ற காரணங்களுக்காக சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு புதிய விதிமுறைகளை பிசிசிஐ உருவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி சமீபத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி ஐபிஎல் நிர்வாக கமிட்டியில் இடம் வகிக்கும் ஒரு முக்கிய நபர் கூறியது பின்வருமாறு. “லீக்கின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் அணி உரிமையாளர்களிடம் ஐபிஎல் நிர்வாகம் ஒரு உறுதிப்பாட்டை கொண்டுள்ளது. அவர்கள் பல திட்டமிடலுக்குப் பிறகு ஒரு வீரரை ஏலம் எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஏதேனும் ஒரு நியாயமற்ற காரணங்களுக்காக திடீரென ஒருவர் வெளியேறுவது அதுவரை அந்த அணி நிர்வாகம் போட்டு வைத்திருந்த கணக்கிற்கும் திட்டத்திற்கும் எதிரானதாக அமைகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அனைவரும் குறிப்பிட்ட வருடங்கள் தடுக்கப்படுவார்கள் என்ற ஸ்வீப்பிங் கொள்கை இருக்காது. இருப்பினும் இது வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு காரணங்களுக்காக மாறுபடும் என்பதால் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக ஒரு சில ஆராய்ச்சிகள் செய்யப்படும். அதாவது ஒருவர் நியாயமான காரணத்தால் வெளியேறினால் என்ன செய்வது என்ற நிலையிலும் யோசித்து முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.
நியாயமில்லா காரணங்கள்:
பொதுவாக ஐபிஎல் தொடருக்காக முன்பாக ஒரு அணி நிர்வாகம் தங்களது அணியில் இந்த இடத்தில் இந்த வீரர் விளையாடினால் வெற்றி பெறலாம் என கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு ஏலத்தில் பணத்தை செலவிட்டு வாங்குகின்றன. அப்படிப்பட்ட நிலையில் ஏலத்தில் ஒப்பந்தமான பின் திடீரென விலகுவதால் விலகும் வீரருக்கு நிகரான ஒரு வீரரை அந்த அணி நிர்வாகத்தால் அனைத்து நேரங்களிலும் திடீரென வாங்க முடியாது. அதுவும் நியாயமற்ற காரணங்களுக்காக ஒரு சில வீரர்கள் வெளியேறுவது கண்டிப்பாக அந்த அணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எடுத்துக்காட்டாக இந்த வருடம் ஐபிஎல் தொடருக்காக நடந்த ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் 2 மாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டும் என்பதை அறிந்துதான் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அது போன்ற நிலைமையில் ஐபிஎல் தொடரின் விதிமுறைகளை பற்றி முன்கூட்டியே அறிந்த அவர்கள் திடீரென ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக விலகுவதில் நிச்சயமாக எந்தவித நியாயமான காரணமும் இல்லை.
இதையும் படிங்க : இவர் எப்போவுமே கேப்டன்ஷிப்க்கு சரிப்பட்டு வரமாட்டார் – ஆதாரத்துடன் கேஎல் ராகுலை வெளுக்கும் ரசிகர்கள்
ஒருவேளை அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்பவில்லையெனில் ஏலத்தில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம் அல்லவா! எனவே இனிமேல் இதுபோன்ற நியாயமற்ற காரணங்களுக்காக வெளியேறும் வீரர்களை தடுக்கும் வகையில் புதிய மாற்றங்களை செய்யப்படும் என அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் அதுபோன்ற வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளும் நிச்சய உரிமையும் அணி நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆராய்ந்து முடிவு எடுத்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



