ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இரவு நேரத்தில் நடைபெறுவது வழக்கமாகும். இன்னும் சொல்ல வேண்டுமெனில் ஒரு அணி விளையாடும் 14 லீக் போட்டிகளில் 12 போட்டிகள் இரவு நேரத்தில் நடைபெறுவது வாடிக்கையாகும்.
அந்தப் போட்டிகளில் இரவு நேரத்தில் பெய்யக்கூடிய பனி மைதானத்தையும் பந்தையும் ஈரமாக்கி விடும். அதன் காரணமாக இரவு நேரத்தில் பந்தை சரியாகப் பிடித்து தாங்கள் விரும்பும் இடத்தில் பௌலிங் செய்ய பவுலர்கள் தடுமாறுவார்கள். அதே போல ஈரமாக இருப்பதனால் இரவு நேரத்தில் தேய்ந்த பந்து வழுக்குவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும்.
2 பந்து விதிமுறை:
அதனால் ஃபீல்டர்களால் பந்தை சரியாக பிடித்து ஃபீல்டிங் செய்ய முடியாது. சொல்லப்போனால் அதன் காரணமாக நிறைய வீரர்கள் கேட்ச் தவற விடுவதையும் பார்க்க முடியும். மொத்தத்தில் பனி என்பது இரவு நேரத்தில் பௌலிங் செய்யும் அணிக்கு பாதகத்தையும் சேசிங் செய்யும் அணிக்கு சாதகத்தையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதைத் தவிர்ப்பதற்காக இரவு நேரத்தில் நடைபெறும் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 2 பந்துகளைப் பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி இரவு நேரத்தில் நடைபெறும் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் முடிந்ததும் 2வது பந்து பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். அந்தப் பந்தை கொடுக்குமாறு பவுலிங் செய்யும் அணியின் கேப்டன் நடுவரிடம் அனுமதி கோரலாம். அப்போது களத்தின் சூழ்நிலைகளை நடுவர் சோதித்த பின்பே புதிய பந்தை பௌலிங் செய்யும் அணிக்கு வழங்குவார்.
வரலாறு காணாத விதிமுறை:
அதாவது மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறதா? என்ற விஷயங்களை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் நடுவர் புதிய பந்தை வழங்குவார். அந்தப் புதிய பந்தும் முற்றிலும் புதிதாக இருக்காது. ஏற்கனவே விளையாடப்பட்ட பந்தைப் போன்ற நிலையை கொண்டுள்ள மாற்று பந்து வழங்கப்படும். இந்த விதிமுறை பகலில் நடைபெறும் போட்டிகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓகே சொன்ன நிர்வாகம்.. ஐ.பி.எல் தொடருக்கு மீண்டும் வரும் பழைய ரூல் – பவுலர்களுக்கு ஹேப்பி தான்
ஐபிஎல் வரலாற்றில் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு எத்தனையோ போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் சேசிங் செய்து எளிதாக வெற்றி பெற்றுள்ளன. தற்போது அந்த சாதகத்தை உடைத்து பேட்டிங் – பௌலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டியை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வரலாறு காணாத விதிமுறைக் கொண்டு வரப்படுகிறது. இந்த விதிமுறைக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



