ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணிக்கு – ஹைதெராபாத் சவால் கொடுக்குமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் ஒரு அணியாக பார்க்கப்படுகிறது. அதற்கு சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி சவால் விட்டு 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதை பற்றி பார்ப்போம்.

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோரின் வரிசையில் எஸ்ஏ20 தொடரில் அடுத்தடுத்த சாம்பியன் பட்டங்களை வென்ற அனுபவமிக்க ஐடன் மார்க்ரமை கழற்றி விட்டுள்ள ஹைதராபாத் பட் கமின்ஸை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்ததை போல் தங்களுக்கு அவர் கோப்பையை வென்று கொடுப்பார் என்று ஹைதராபாத் நம்புகிறது.

- Advertisement -

சென்னை – ஹைதெராபாத்:
ஆனால் ஒரு பந்தில் வெற்றி கைமாறக்கூடிய டி20 கிரிக்கெட்டில் பும்ரா அளவுக்கு பந்து வீச்சில் தரமில்லாத பட் கமின்ஸ் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா அளவுக்கு கூட அனுபவமற்றவர் என்பது ஹைதராபாத்துக்கு பின்னடைவாகும். அதே போல பந்து வீச்சில் உம்ரான் மாலிக் ரன்களை வாரி வழங்குவார் என்பதும் பின்னடைவாகும். எனவே அனுபவிக்க புவனேஸ்வர் குமார் மற்றும் தமிழகத்தின் நடராஜன் ஆகியோர் மட்டுமே ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு துறையின் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

அதே சமயம் மார்கோ யான்சென், ஜெய்தேவ் உனட்கட், ஆப்கானிஸ்தானின் பரூக்கி ஆகியோர் ஓரளவு தரமான வேகப்பந்து வீச்சளார்களாக திகழ்கின்றனர். சுழல் பந்து வீச்சு துறையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இலங்கையின் ஹஸ்ரங்கா ஆகியோர் தரமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதில் மார்கோ யான்சென், சுந்தர், ஹஸரங்கா ஆகியோர் பேட்டிங்கிலும் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறமையை பெற்றுள்ளது ஹைதெராபாத்துக்கு பலமாகும்.

- Advertisement -

பேட்டிங் துறையில் புதிதாக வாங்கப்பட்ட டிராவிஸ் ஹெட் நொறுக்கக்கூடிய ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். இருப்பினும் அவருடன் ஓப்பனிங்கில் களமிறங்க வாய்ப்புள்ள மயங்க அகர்வால், அபிஷேக் சர்மா ஆகியோர் கடந்த வருடத்தை போல் அல்லாமல் இம்முறை சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. அதே போல மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி, ஐடென் மார்க்ரம், அப்துல் சமத், சபாஷ் அகமது ஆகியோர் கடந்த வருடங்களைப் போல் அல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க வேண்டியது வெற்றிக்கு அவசியம்.

அதே சமயம் தென்னாபிரிக்காவின் ஹென்றிச் கிளாசின் மற்றும் நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் சரவெடியாக விளையாடும் திறமையைக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களே ஃபினிஷிங் வேலையை செய்ய நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே காயத்தை சந்தித்தாலும் ருதுராஜுடன் ஓப்பனிங்கில் களமிறங்கி அதிரடியாக விளையாட ரச்சின் ரவீந்திரா தயாராக உள்ளார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து மொய்ன் அலி, அஜிங்க்ய ரகானே ஆகிய அனுபவமிக்க வீரர்கள் மிடில் ஆர்டரை அலங்கரிக்க உள்ளனர். ஓய்வு பெற்ற ராயுடு இடத்தை நிரப்பும் அளவுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் டார்ல் மிட்சேல் தரமானவராகவே உள்ளார். அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்த புத்துணர்ச்சியுடன் சிக்சர்களை பறக்க விட சிவம் துபே, நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் ஃபினிஷர்களாக அசத்துவதற்கு லோயர் மிடில் ஆர்டரில் தயாராக உள்ளனர்.

சுழல் பந்து வீச்சு துறையில் பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய ஜடேஜா, மிட்சேல் சேட்னர், மொய்ன் அலி ஆகியோருடன் மஹீஸ் தீக்சனா பலம் சேர்க்கிறார். வேகப்பந்து வீச்சு துறையில் பதிரனா காயத்தை சந்தித்தாலும் அதை நிரப்ப முஸ்தஃபீசுர் ரஹ்மான், முகேஷ் சவுத்ரி, தயாராக உள்ளனர். அத்துடன் பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய சர்துள் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோர் சென்னை கோப்பையை வென்ற 2018, 2021 சீசன்களைப் போல இந்த வருடம் மீண்டும் ஜோடி சேர்ந்து பந்து வீச உள்ளனர்.

- Advertisement -

மொத்தத்தில் என்ன தான் உலகக் கோப்பையை வென்றாலும் பட் கமின்ஸ் இதுவரை டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அசத்தியதில்லை. மறுபுறம் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்டவர். எனவே புதிய கேப்டன் பட் கமின்ஸ் தலைமையில் இன்னும் செட்டிலாகாத பிளேயிங் லெவனுடன் களமிறங்க உள்ள ஹைதராபாத்தை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்வதற்கு தேவையான தரம் நன்கு செட்டிலான பிளேயிங் லெவனை கொண்ட தோனி தலைமையிலான சென்னைக்கு இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: அவங்களோட எங்களை கம்பேர் பண்ணாதீங்க.. அதை செஞ்சா ஆர்சிபி வரலாறு படைக்கும்.. கேப்டன் மந்தனா பேட்டி

வரலாற்றில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் 19 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 2018 ஃபைனல் உட்பட சென்னை 14 போட்டிகளில் வென்றுள்ளது. ஹைதராபாத் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

Advertisement