ஐபிஎல் 2024 : தரமான சிஎஸ்கே அணிக்கு – வலுவான மும்பை சவால் கொடுக்குமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

CSK vs MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஐபிஎல் என்றாலே கோப்பையை வெல்வதற்கு சென்னை அணியுடன் மற்ற அணிகள் போட்டி போடும் தொடர் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஒருமுறை கூறியுள்ளார்.

அந்தளவுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் சென்னைக்கு சவாலை கொடுக்க உள்ள எதிரணிகளில் இம்முறையும் பரம எதிரி மும்பை பெரிய சவாலை கொடுக்கும் என்றே சொல்லலாம். அந்த அணியை பொறுத்த வரை ஓப்பனிங்கில் ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி அசத்திய ரோஹித் சர்மா ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவருடைய தரத்திற்கு எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக விளையாடி ரன்கள் அடிக்கலாம்.

- Advertisement -

சென்னை – மும்பை:
இருப்பினும் அவருடன் களமிறங்கும் மற்றொரு துவக்க வீரர் இசான் கிசான் சமீபத்தில் எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மிடில் ஆர்டரில் எப்படி போட்டாலும் வெளுத்து வாங்கக்கூடிய உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமாகி அசத்திய இளம் திலக் வர்மா ஆகியோர் மும்பைக்கு வலு சேர்க்கின்றனர்.

மேலும் குட்டி ஏபிடி என்றழைக்கப்படும் தேவால்ட் ப்ரேவிஸ், நேஹல் வதேரா ஆகிய இளம் வீரர்கள் மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறமை கொண்டிருப்தை கடந்த சீசன்களில் காட்டினர். லோயர் மிடில் ஆர்டரில் டிம் டேவிட் மற்றும் மீண்டும் வந்துள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஃபினிஷர்களாக செயல்படும் திறமையை கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. மேலும் ரோமாரியா செஃபார்ட், முகமது நபி போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக விளையாடுவதற்காக வாங்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதே போல மும்பையின் பவுலிங் துறையின் ஆணிவேராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்சி உறுதுணையாக நிற்கும் தன்மையை கொண்டவர். அவர்களுடன் ஆகாஷ் மாத்வால், நுவான் துஷாரா, ஜேசன் பேரன்ஃடாப், மதுசங்கா ஆகியோரும் வேகப்பந்து வீச்சு துறையில் அசத்துவதற்கான திறமையை கொண்டுள்ளனர்.

ஆனால் பியூஸ் சாவ்லா, ஸ்ரேயாஸ் கோபால், குமார் கார்த்திகேயா ஆகியோர் அடங்கிய மும்பையின் சுழல் பந்து வீச்சு கூட்டணி அச்சுறுத்தலை கொடுக்கும் அளவுக்கு இல்லை. மறுபுறம் டேவோன் கான்வே காயமடைந்தாலும் 2023 உலகக் கோப்பையில் 25 வயதுக்குள் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்த்ரா சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரராக வலு சேர்க்க உள்ளார்.

- Advertisement -

அவருடன் ஏற்கனவே நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ருதுராஜ் ஜோடி சேர்ந்து விளையாட உள்ளார். அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ராயுடு இடத்தில் புதிதாக வாங்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டார்ல் மிட்சேல், மொய்ன் அலி, அஜிங்க்ய ரகானே ஆகியோர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். இதில் மொய்ன் அலி, மிட்சேல் ஆகியோர் பவுலிங் ஆல் ரவுண்டர்கள் என்பது சென்னைக்கு கூடுதல் பலமாகும்.

அவர்களைத் தொடர்ந்து கடந்த வருடம் சிக்சர் மெஷின்னாக செயல்பட்ட சிவம் துபே, நம்பிக்கை நாயகன் ரவிந்திர ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் எம்எஸ் தோனி எதிரணிகளை நொறுக்கி ஃபினிஷிங் செய்யக்கூடியவர்கள். வேகப்பந்து வீச்சுத் துறையில் மதிஷா பதிரனா, முஸ்தஃபீஸூர் ரகுமான், தீபக் சஹர், சர்துள் தாக்கூர் ஆகியோர் எதிரணிகளுக்கு சவாலை கொடுப்பதற்கு தேவையான அளவுக்கு தரத்துடன் இருக்கின்றனர்.

- Advertisement -

இதில் தாக்கூர் 2024 ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி தற்போது சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். அத்துடன் மொய்ன் அலி, ஜடேஜா, மிட்சேல் சான்ட்னர் ஆகியோரை கொண்ட சுழல் பந்து வீச்சு துறையும் மும்பையை விட சென்னைக்கு வலுவானதாக இருக்கிறது. மேலும் சமர் ரிஸ்வி, ராஜ்வர்தன், முகேஷ் செளத்ரி, துஷார் தேஷ்பாண்டே போன்ற பேக்-அப் வீரர்களும் தரமானவர்களாவே உள்ளனர். இவை அனைத்தையும் விட ஹர்திக் பாண்டியாவை விட தோனி பன்மடங்கு திறமை மற்றும் அனுபவம் மிகுந்த கேப்டனாக இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை ஃபைனலில் அபார சதம்.. சச்சினின் 30 வருட சாதனையை அவர் முன்பே உடைத்த முஷீர் கான்

எனவே புதிதாக வந்துள்ள பாண்டியா தலைமையிலான மும்பையை சமாளித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் அளவுக்கு தோனி தலைமையிலான சென்னை வலுவாக உள்ளது என்றால் மிகையாகாது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 38 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை 17 வெற்றிகளையும் மும்பை 21 வெற்றிகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement