ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பெரிய கோடிகளுக்கு விலை போகக்கூடிய 3 வெளிநாட்டு ஆல் ரவுண்டர்கள் – பட்டியல் இதோ

sam curran
Advertisement

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. 2023 சீசனில் புதிய வருடத்தில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பை வெல்வதற்காக ஏற்கனவே உள்ள வீரர்களுடன் தங்களது அணியை வலுப்படுத்தும் வகையில் மேலும் சில தரமான வீரர்களை இந்த ஏலத்தில் வாங்குவதற்கு அனைத்து அணிகளும் தயாராகியுள்ளன.

IPL

பொதுவாக ஐபிஎல் ஏலம் என்றாலே தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு மவுசு அதிகமாகும். அதை விட சீமை சரக்குக்கு இந்தியாவில் எப்போதுமே மவுசு அதிகம் என்று சொல்வது போல் வெளிநாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் காலம் காலமாக தனி மவுசு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தும் ஆல் ரவுண்டர்களுக்கு எப்போதுமே மதிப்பு இரு மடங்கு அதிகமாகும். அந்த வகையில் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய 3 வெளிநாட்டு ஆல் ரவுண்டர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. கேமரூன் க்ரீன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் திறமை கொண்டுள்ளார். குறிப்பாக கடந்த மாதம் இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய பவுலர்களை அதிரடியாக விளாசி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இவர் ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் ஈர்த்தார்.

Cameron-Green

இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக இவர் 8 போட்டிகளில் 139 ரன்களை 173.75 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டிலும் 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். தற்போது வெறும் 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் இந்திய மண்ணில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் சில அணிகளில் அடுத்த 5 முதல் 10 வருடங்களுக்கு நீண்ட கால தீர்வாக இருப்பார் என்பதால் இவரை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் பெரிய கோடிகளை செலவழிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

2. பென் ஸ்டோக்ஸ்: இதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர் ஏற்கனவே கடந்த 2017 வாக்கில் 10 கோடிகளுக்கு விலை போனார். அதன் பின் 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றதில் முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை ஃபைனலில் அரைசதம் அடித்து 2வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

stokes 1

அந்த வகையில் உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டரான இவரது மவுசு முன்பை விட எகிறியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக காயம் மற்றும் பணிச் சுமையால் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத இவர் இம்முறை ஏலத்தில் களமிறங்க உள்ளார். அத்துடன் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அனுபவம் கொண்டுள்ள இவரை சில அணிகள் தங்களது வருங்கால கேப்டனாக நியமிக்க விரும்பலாம். மொத்தத்தில் இந்த ஏலத்தில் இவர் 5 – 10 கோடிக்கு விலை போவார் என்று உறுதியாக சொல்லலாம்.

1. சாம் கரண்: கடந்த 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து பின்னர் சென்னை அணியில் தமிழக ரசிகர்கள் சுட்டிக் குழந்தை என்று கொண்டாடும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இவர் கடந்த வருடம் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அதனால் கடந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாத அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 உலகக்கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு ஃபைனலில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 மாபெரும் விருதுகளை வென்று இங்கிலாந்து 2வது கோப்பையை முத்தமிட கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

Sam-Curran-CSK

மேலும் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் இளம் வீரராகவும் இருப்பதால் நிச்சயமாக சென்னை உட்பட அனைத்து அணிகளும் இவரை வாங்க கடுமையாக போட்டி போடும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் இவர் 10 கோடிக்கும் மேல் விலை போவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement