ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமான 3-வது வார்த்தை கடந்து ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று பல பரபரப்பான எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது. கடைசி பந்தில் கூட வெற்றி கைமாறிப்போகும் அளவுக்கு நிறைய போட்டிகள் நடைபெறுவதால் எந்த போட்டியின் வெற்றியையும் அவ்வளவு சுலபமாக கணிக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு தரமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் தற்போது நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரை வீரர்களின் நலன் கருதி 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் பிசிசிஐ நடத்தி வருகிறது. இதைப் பார்ப்பதற்கு வெறும் 25 – 50% அளவிலான ரசிகர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்கு பின்பு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பதறும் பிசிசிஐ:
அதற்கு காரணம் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணியில் இருந்த ஒருசில வீரர்களுக்கு கரோனா ஏற்பட்டதால் திடீரென்று பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அதன்பின் பல தடைகளை கடந்து எஞ்சிய ஐபிஎல் தொடரை துபாயில் நடத்திய பிசிசிஐ அதை வெற்றிகரமாக முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டது. அதுபோன்ற ஒரு நிலைமை இந்த வருடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த பிசிசிஐக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மீண்டும் அந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பட்ரிக் பர்ஹட் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் சேட்டன் குமார் ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் முறையாக அந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அது ஏப்ரல் 18-ஆம் தேதி டெல்லி அணியின் மருத்துவர் அபிஜித் சல்வி, ஆகாஷ் மானே ஆகியோருக்கு பரவியது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் மிட்செல் மார்ஷ்க்கும் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்தது. அதே போல் இதர அணி உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
போட்டியில் மாற்றம்:
இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி மறு பரிசோதனை செய்யப்பட்டதில் மிச்சல் மார்ஷ் தவிர அனைவருக்கும் இல்லை என்று முடிவில் வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் மிச்சல் மார்ஷல் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை பரிசோதனை செய்யப்பட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் பட்சத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடக்கவிருந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் 32-ஆவது லீக் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்தே டெல்லி அணியை சேர்ந்த அனைவரும் அந்த போட்டி நடைபெறும் நகரமான புனேவுக்கு செல்லாமல் தொடர்ந்து மும்பையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். எனவே பயணத்தின் போது அது மேலும் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் 32-ஆவது லீக் போட்டி புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்திற்கு பதிலாக மும்பையிலுள்ள ப்ராபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
முழுதாக நடக்குமா:
அந்த போட்டிக்கு முன்பாக மிட்செல் மார்ஷ் குணம் அடையவில்லை என்றாலும் கூட இதர வீரர்களை வைத்து பெரும்பாலும் அந்த போட்டி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் விளையாட டெல்லி அணி தயாராகவில்லை என்ற நிலைமை ஏற்பட்டு போட்டி ரத்து செய்யப்படும் நிலைமை ஏற்படும் பட்சத்தில் லீக் சுற்றின் இறுதியில் அந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

மொத்தத்தில் இந்தப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆரம்பம் முதலே கடுமையான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதையும் தாண்டி தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் நிலவும் இந்த பதற்றமான சூழலால் இந்த வருட ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



