ஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெயிலின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த ஜடேஜா – விவரம் இதோ

14வது ஐபிஎல் சீசன் இன் 19வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி பெங்களூர் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் அணி தொடர்ச்சியான விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இந்த போட்டியில் அவர், யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லின் சாதனை ஒன்றையும் சமன் செய்திருக்கிறார். 14வது ஓவரின் 5வது பந்தில் டுயூப்ளசிஸ் அவுட்டானதும் களத்திற்கு நுழைந்த ரவீந்திர ஜடேஜா, முதல் இன்னிங்சின் கடைசி ஓவரில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரின் பர்பிள் கேப் ஹோல்டரும், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி சுரேஷ் ரெய்னா, டுயூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஹர்ஷல் பட்டேல் வீசிய இருபதாவது ஓவரை பிரித்து மேய்ந்த ரவீந்திர ஜடேஜா, அந்த ஓவரில் 36 ரன்களை அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியும் அடக்கம்.

jadeja 1

இருபதாவது ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா அந்த ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். அதில் ஒரு நோபாலும் அடக்கம். எனவே அந்த ஓவரில் ஒரு பந்து அதிகமாக வீசப்பட்டது. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த ஜடஜா ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் ஆறாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் அந்த ஓவரில் ஜடேஜா 36 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

jadeja 2

இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர்களில் 2011ம் ஆண்டு கிறிஸ் கெயில் கொச்சி அணியின் பவுலர் பரமேஸ்வரன் ஓவரில் 36 ரன்கள் அடித்திருந்ததே, ஒரு ஓவரில் ஒரு வீரர் அடித்திருக்கும் அதிகபட்ச ரன்களாக இருந்தது. நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் ஏழு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா மொத்தம் 36 ரன்கள் அடித்தார். இதன்மூலம் கிறஸ் கெயிலின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.