முதல் தொடரிலேயே இந்தியா வெற்றி. லெஜெண்ட் மித்தாலியை முந்தி புதிய சாதனை படைத்த நட்சத்திர வீராங்கனை

Harmanpreet Kaur INDW vs SLW Womens Cricket
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக ஜூன் 23இல் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூன் 25-ஆம் தேதியான நேற்று தம்புலா நகரில் மதியம் 2 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 125/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் விஷ்மி குணரட்னே 45 (60) ரன்களும் நட்சத்திர வீராங்கனை மற்றும் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (41) ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்கள் அவுட்டானதை பயன்படுத்திய இந்தியா அதன்பின் சுதாரித்து மிகச் சிறப்பாக பந்துவீசி கவிசா திலாரி 2 (5) நிலாக்சி டீ சில்வா 1 (2) என முக்கிய வீராங்கனைகளை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து போட்டியை மொத்தமாக தனது பக்கம் திருப்பியது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியா அபாரம்:
அதை தொடர்ந்து 126 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 (10) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மேக்னா 4 பவுண்டரியுடன் 17 (10) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனால் 48/2 என தடுமாறிய இந்தியாவுக்கு மற்றொரு நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரியுடன் 39 (34) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஜெமிமா ரோட்ரிக்கஸ் 3 (6) யஸ்டிக்கா பாட்டியா 13 (18) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியா மேலும் தடுமாறியது.

- Advertisement -

அந்த சமயத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 2 பவுண்டரியுடன் 31* (32) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் ஃபினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரில் 127/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே கைப்பற்றியுள்ள இந்திய மகளிர் அணி சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது புதிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளார்கள் என்றே கூறலாம்.

புதிய கேப்டன் ஹர்மன்ப்ரீட்:
ஏனெனில் கடந்த 1999இல் 17 வயதில் அறிமுகமாகி கடந்த 24 வருடங்களாக இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஏராளமான ரன்களை குவித்து ஒரு கேப்டனாக மிகச் சிறப்பாக வழி நடத்தி வந்த மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் வயது காரணமாக சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இந்தியா கண்டெடுத்த மகத்தான வீராங்கனையாக பார்க்கப்படும் அவர் எப்படியாவது உலக கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பல வருடங்களாக போராடிய போதிலும் கடைசி வரை அந்த முயற்சியில் தோல்வியடைந்து ஓய்வு பெற்றார். அவரது தலைமையில் களமிறங்கும் 11 வீராங்கனைகளும் உலகத்தரமானவர்களாக இல்லாத காரணத்தால் 90களில் இந்திய ஆடவர் அணி தடுமாறியதை போல திணறும் மகளிர் அணியினர் இன்னும் ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலைமையில் மகளிர் கிரிக்கெட்டில் லெஜெண்டாக போற்றப்படும் மிதாலி ராஜ் ஓய்வுக்குப் பின் இதுநாள்வரை டி20 கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருந்து வந்த ஹர்மன்பிரீட் கவூர் தற்போது 3 வகையான இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்புக்குப் பின் நடைபெறும் இந்த இலங்கைக்கு எதிரான முதல் தொடரிலேயே இந்தியா அபார வெற்றி பெற்று அவரது தலைமையில் தனது புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

புதிய சாதனை:
இப்போட்டியில் 31* ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்த ஹர்மன்பிரீட் கௌர் ஆட்டநாயகி விருதை வென்றார். அதைவிட புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேறறுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜ் ஆல்-டைம் சாதனையை உடைத்து புதிய சாதனையும் படைத்துள்ளார்.

அந்த பட்டியல் இதோ:
1. ஹர்மன்ப்ரீத்தி கௌர் : 2372, 123 போட்டிகள்
2. மித்தாலி ராஜ் : 2364, 89 போட்டிகள்

Advertisement