- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுயநலமா விளையாடாதீங்க ப்ளீஸ், விராட் கோலியை மீண்டும் வம்பிழுக்கும் கம்பீர் – பேசியது என்ன

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறியுள்ள இந்தியாவுக்கு சமீபத்தில் சந்தித்த ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புவனேஸ்வர் குமார் போன்ற இதர பவுலர்கள் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதால் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் தற்சமயத்தில் ரோகித, ராகுல் ஆகியோரை விட அட்டகாசமான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவும் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியையும் ரசிகர்கள் அதிகம் நம்பியுள்ளனர். அதிலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து அடித்து நொறுக்கிய விராட் கோலி உலகக் கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய பேட்டிங் துறைக்கு பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் 24000+ ரன்களையும் 71 சதங்களையும் அடித்துள்ள அவர் ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

சுயநலமான கோலி:
அதிலும் குறிப்பாக டி20 உலகக் கோப்பைகளில் 800+ ரன்களை குவித்துள்ள அதிக அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் 2 (2014, 2016) அடுத்தடுத்த தொடர்களில்  தொடர் நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரராகவும் மாபெரும் உலக சாதனைகளை படைத்துள்ளார். அதைவிட 2014இல் உயிரைக் கொடுத்து பேட்டிங் செய்த அவர் மாபெரும் பைனலில் இந்தியா எடுத்த 130 ரன்களில் தனி ஒருவனாக 77 (55) ரன்கள் குவித்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் வெற்றி பெற முடியவில்லை.

அதே போல் 2016 தொடரிலும் போராடிய அவர் கோப்பையை தொட முடியாத நிலையில் இம்முறை அதை விட அசத்தலாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க தயாராகி வருகிறார். இந்நிலையில் அதிக ரன்களை எடுத்து சொந்த சாதனைகளை படைத்து 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் தொடர் நாயகன் விருதுகளை வென்றாலும் இந்தியா கோப்பையை வெல்லாமல் போனால் அதில் எந்த பயனுமில்லை என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். அதனால் 500 ரன்கள் அடிப்பதை விட அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி செயல்பட வேண்டுமென கூறும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரன்களை அடிக்க வேண்டும் என்று அணுகுமுறையுடன் செல்வதை விட வேறு என்ன வேண்டும்? பேட்ஸ்மேன்களின் வேலை ரன்கள் எடுப்பது, பவுலர்களை விக்கெட்டுகளை எடுப்பது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் அணியின் வெற்றிக்காக ரன்களை குவிக்க வேண்டும். அதற்காக 50, 100 ரன்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்காமல் உங்களது அணி 170 – 180 ரன்கள் எடுப்பதற்கு உதவி செய்யும் வகையில் 30 – 40 போன்ற சிறிய ரன்களாக எடுத்தாலும் அதை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்க வேண்டும். மேலும் சேசிங் செய்யும் போது லோயர் மிடில் ஆர்டருக்கு அழுத்தம் ஏற்படாத வகையில் செயல்படுங்கள்.

“இந்த உலக கோப்பையில் தனிநபர் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வீட்டிலேயே விட வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டால் சாதனைகளை இந்தியாவிலேயே மூட்டை கட்டுங்கள். ஏனெனில் தனிநபர் சாதனைகள் இது போன்ற தொடர்களில் எந்த பலனையும் கொடுக்காது. மாறாக உலகக்கோப்பை வெல்வதே நமக்கு முக்கியமாகும். நீங்கள் 200 ரன்கள் எடுத்து உங்களது அணி கோப்பையை வென்றால் அது தான் சாதனையாகும். ஆனால் உங்களது அணி வெல்லவில்லை என்றால் நீங்கள் 500 ரன்கள் எடுத்தாலும் அது உங்களது பெயருக்கு மட்டுமே வரும். அதற்காக மொத்த அணியும் விமர்சனங்களை சந்தித்தாலும் அதை நீங்களும் சந்தியுங்கள்” என்று கூறினார்.

பொதுவாகவே விராட் கோலியை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள கம்பீர் இம்முறை தொடர் நாயகன் விருதை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சுயநலமாக விளையாடாமல் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுமாறு விமர்சித்துள்ளார்.

- Advertisement -