
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நவம்பர் 2ஆம் தேதி ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 186/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 64 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா 18.3 ஓவரிலேயே 188/5 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 49*, திலக் வர்மா 29, கேப்டன் சூரியகுமார் 24, அபிஷேக் சர்மா 25 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக விளையாட முயற்சித்த மோதிலும் பெரிய ரன்கள் குவிக்காமல் அவுட்டானார்கள்.
அதனால் 14.2 ஓவரில் 145/5 என்ற நிலைமையில் இருந்த இந்தியாவுக்கு யாராவது ஒருவர் பெரிய ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அட்டகாசமாக விளையாடி 3 பௌண்டரி 4 சிக்ஸருடன் 49* (23) ரன்களை 213.04 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அரை சதமடிக்க காத்திருந்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா பவுண்டரியுடன் 22* (13) ரன்கள் விளாசி போட்டியை முடித்தார். அதனால் சுந்தர் அரை சதத்தை அடிப்பதற்கு முன்பே இந்தியா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் அரை சதமடிக்காமலேயே 2வது அதிகபட்ச இலக்கை (187) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியிடம் இந்த போட்டியில் நாங்க தோக்க இதுவே காரணம்.. தோல்விக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் வருத்தம்
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 179 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. அந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள் அடித்தார். அதே சாதனைப் பட்டியலில் 2025இல் பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து அரை சதமடிக்காமலேயே 197 ரன்களை சேசிங் செய்து முதலிடத்தில் இருக்கிறது.