கடந்த டி20 உ.கோ விட நம்முடைய பேட்டிங் மோசமாக இருக்கு – ஆசிய கோப்பைக்கு முன்பாக முன்னாள் இந்திய வீரர் கவலை

Rahul
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆசிய கோப்பை 2022 தொடர் கோலாகலமாக ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்ல 6 அணிகள் பங்கேற்கும் நிலையில் முதல் போட்டியில் இலங்கையை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அதிரடி வெற்றி பெற்றது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக தங்களுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்ற ஆர்வம் 140 கோடி இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் வரலாற்று தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகவும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவரைத் தவிர வேறு இடது கை வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தானிடம் இல்லாத நிலைமையில் அவரைப் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதில் இப்போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிரிடம் சிக்கி சின்னாபின்னமான இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடரில் அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியிடம் மண்ணைக் கவ்வியது.

எதார்த்தமும் உண்மையும்:
அந்த வகையில் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து நல்ல வேகமும் பவுன்ஸையும் சேர்த்து ஒரு இடதுகை பந்துவீச்சாளர் தாக்கினால் நிச்சயம் அதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் அடங்கிய இந்திய டாப் ஆர்டர் பெட்டிப் பாம்பாக அடங்குவதற்கு 90% வாய்ப்புள்ளது. அதுபோக தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி சுமாரான பார்மில் தவிப்பதும் உலகமே அறியும்.

Rahul-1

மேலும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடிய கேஎல் ராகுல் இந்தியாவுக்காக இந்த வருடம் இதுவரை எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பின் சந்தித்த காயத்தால் சில மாதங்கள் விலகியிருந்த அவர் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் சுமாராகவே செயல்பட்டார். அதே போல் நடைபெற்று முடிந்து ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக அரைசதம் கூட அடிக்காத கேப்டன் ரோகித் சர்மாவும் தடுமாற்றமான பார்மில் தான் உள்ளார்.

- Advertisement -

ஜடேஜா கவலை:
மொத்தத்தில் எதார்த்தத்தை பார்க்கும்போது சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களைக் கொண்ட மிடில் ஆர்டர் தான் வலுவாகவும் நல்ல பார்மிலும் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த டி20 உலக கோப்பை விட தற்போதைய இந்திய பேட்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கவலை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்பாக அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த டி20 உலக கோப்பையை விட இம்முறை இந்திய பேட்டிங் மோசமாகவே உள்ளது. காயத்தால் கேஎல் ராகுல் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அதிலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வே தொடரில் முயற்சித்த அவர் பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை”

Ajay

“விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடவே இல்லை. ரோகித் சர்மாவும் கடந்த வருடம் தான் நல்ல பார்மில் இருந்தார். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் அபாரமாக செயல்படுகிறார். தற்சமயத்தில் அவர் மட்டுமே தொடர்ச்சியாக விளையாடி நல்ல பார்மில் உள்ளார். எனக்கு இருக்கும் ஒரே கவலை என்னவென்றால் நமது முந்தைய சிறந்த வீரர்கள் அறியப்படாத கிரிக்கெட் பிராண்ட் ஒன்றை தற்போதைய வீரர்கள் விளையாட விரும்புகிறோம். அதாவது தற்போதைய இந்திய அணியில் உள்ள சிறந்த வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுபவர்கள் அல்ல. அவர்கள் தொடர்ச்சியான திடமானவர்கள். ஆனால் அவர்கள் அப்படி விளையாடுவதை நாம் விரும்பவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs PAK : டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு. பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் – லிஸ்ட் இதோ

அதாவது தற்சமயத்தில் இருக்கும் வீரர்கள் பாகிஸ்தான் போன்ற மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த முக்கிய போட்டிகளில் ஆக்ரோஷத்துடன் விளையாடுவதில்லை என்று கவலை தெரிவிக்கும் அஜய் ஜடேஜா சமீப காலங்களில் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடாமல் இருப்பதும் இந்திய பேட்டிங் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

Advertisement