இதெல்லாம் இந்திய அணிக்கு தேவையில்லாத வேலை.. அப்றம் ரொம்ப வருத்தப்படாதீங்க.. பிசிசிஐ முடிவை எச்சரித்த வாசிம் அக்ரம்

Wasim Akram
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா 8வது முறையாக கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் மகத்தான வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா மாபெரும் ஃபைனலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு சுருட்டி சாதனை வெற்றி பெற்று அசத்தியது.

அதனால் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க காத்திருக்கும் இந்திய அணி 2011 போல சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் கேஎல் ராகுல், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் மீண்டும் குணமடைந்து இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினர்.

- Advertisement -

தேவையில்லாத வேலை:
இதைத்தொடர்ந்து இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய அணி அடுத்ததாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இறுதிக்கட்டமாக சோதித்துப் பார்க்க நினைக்கும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணியில் இருக்கும் ஓரிரு குறைகளையும் சரி செய்வதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராகியுள்ளது.

இருப்பினும் உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இந்த தொடரில் இந்திய அணி விளையாடுவது தேவையற்ற வேலை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் ஆசிய கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்கள் சில நாட்கள் ஓய்வெடுத்து உலக கோப்பையில் புத்துணர்ச்சியுடன் முழு எனர்ஜியுடன் களமிறங்கினால் தான் வெற்றி காண முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் இது போன்ற தொடர்களில் விளையாடும் போது கடைசி நேரத்தில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறி வருத்தத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த தொடருக்காக இந்திய அணி வெவ்வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்காக பயணிப்பதற்கு மட்டும் ஒருநாள் தேவைப்படும்”

இதையும் படிங்க: 23 வருஷமா என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு.. அடுத்தது உ.கோ தான் டார்கெட்.. நன்றியுடன் இந்திய அணியை வாழ்த்திய யுவி

“ஆனால் இதுபோன்ற சமயங்களில் நீங்கள் உங்களுடைய எனர்ஜியை உலகக் கோப்பைக்காக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பயிற்சி வேண்டுமென்றால் இதை நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு செய்திருக்க வேண்டும். ஏனெனில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் நீங்கள் பெரிய தொடருக்கு முன்பாக களைப்படைந்து விடக்கூடாது. இந்த நிலையில் உங்களுக்கு மேலும் சில வீரர்கள் தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பயன்படுத்தலாம்” என்று கூறினார்.

Advertisement