126/4 டூ 136க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அணியை சுருட்டிய இந்திய மகளிரணி.. புதிய உலக சாதனை டார்கெட்

IND vs ENG Womens
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளின் இழப்புக்கு 428 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது.

இந்திய அணிக்கு ஸ்மிருத்தி மந்தனா 17, ஷபாலி வர்மா 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீராங்கனை சுபா சதீஷ் அரை சதமடித்து 69, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்டரிகஸ் 68 ரன்கள் எடுத்தனர். அதை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடி 49 ரன்களில் அவுட்டான தவறை செய்யாத யாஸ்திகா பாட்டியா அரை சதம் கடந்து 66 ரன்களும் தீப்தி சர்மா 67 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

தயாராகும் சாதனை இலக்கு:
மறுபுறம் சுமாராக விளையாடிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாரன் பெல் மற்றும் சோபி எக்லெஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்துக்கு பியூமோண்ட் 10, டுங்க்லி 11, ஹீதர் நைட் 11, டேனியல் வைட் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் நட்சத்திர வீராங்கனை நட் ஸ்கீவர் 10 பவுண்டரியுடன் 59 ரன்கள் குவித்ததால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து 126/4 என்ற ஓரளவு நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்தது.

ஆனால் அப்போது ஸ்கீவரை அவுட்டாக்கிய ஸ்னே ராணா தடுப்பை உடைத்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்திய தீப்தி சர்மா அடுத்ததாக எமி ஜோன்ஸ் 12, எக்லெஸ்டன் 0, கேட் க்ராஸ் 1, லாரன் பிலர் 5 என அடுத்து வந்த வீராங்கனைகளை தன்னுடைய தரமான சுழலால் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார். அதனால் 126/4 என்ற நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்து மேற்கொண்டு 10 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஸ்னே ராணா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 292 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 2வது நாள் முடிவில் 186/6 ரன்கள் குவித்துள்ளது. சபாலி வர்மா 33, மந்தனா 26, யாஸ்டிக்கா பாட்டியா 9, ஜெமிமா 27, தீப்தி சர்மா 20, ஸ்னே ராணா 0 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 44*, பூஜா வஸ்திரக்கர் 17* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: தோனியையே மிஞ்சி நிறைவுக்கு வந்த சகாப்தம்.. ஐபிஎல் கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனைகள்

அதை விட தற்போது 478 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா நாளை தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்தால் கூட மகளிர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை இலக்காக நிர்ணயித்த அணி என்ற மாபெரும் உலக சாதனை படைக்க உள்ளது. இதற்கு முன்பாக 1998இல் பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிரணி 410 ரன்கள் இலக்காக நிர்ணயித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement