
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. அப்போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜூன் 28ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் ஆரம்பத்திலேயே அட்டகாசமாக விளையாடினர்.
அதில் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் மந்தனா கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் 52 ஓவர்கள் வரை நங்கூரமிட்ட இந்த ஜோடி 292 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஓப்பனிங் ஜோடி என்ற உலக சாதனையும் அவர்கள் படைத்தனர்.
இந்தியாவின் உலக சாதனை:
அந்த சாதனை ஜோடியில் மந்தனா 27 பவுண்டரி 1 சிக்ஸருடன் 149 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் தென்னாப்பிரிக்க பவுலர்களை பந்தாடிய ஷபாலி வர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீராங்கனையாக உலக சாதனை படைத்து 23 பவுண்டரி 8 சிக்ஸருடன் 205 (197) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் நிதானமாக விளையாடி 55 ரன்கள் குவித்தார்.
அதே போல கேப்டன் ஹெர்மன்ப்ரீத் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 59 ரன்களும் ரிச்சா கோஸ் அதிரடியாக 16 பவுண்டரியுடன் 86 (90) ரன்கள் குவித்தனர். அதனால் இந்தியா 603/6 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 ரன்கள் கடந்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி ஆகிய மாபெரும் இரட்டை உலக சாதனையை சென்னை மண்ணில் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன் இதே வருடம் பிப்ரவரி மாதம் பெர்த் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 575/9 (டிக்ளேர்) குவித்ததே முந்தைய உலக சாதனையாகும். அந்தளவுக்கு சுமாராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டெல்மி டுக்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்யும் தென்னாப்பிரிக்கா இரண்டாவது நாள் முடிவில் 236/4 ரன்கள் எடுத்து தடுமாற்றமாகவே விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: ஓஹோ இப்படி பழி வாங்கீற்கிங்களா? 2024 டி20 உ.கோ முடிந்த கையோடு ரோஹித்துக்கு ஆஸி செய்த காரியம்
அந்த அணிக்கு கேப்டன் லாரா 20, போஸ்க் 39, டெல்மி டுக்கர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் சுனே லஸ் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் விளையாடிய மேரிசன் காப் 69* ரன்களும் டீ க்ளெர்க் 27* ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். தற்சமயத்தில் இந்தியாவை விட இன்னும் 366 ரன்கள் தென்னாப்பிரிக்கா பின்தங்கியுள்ளது. எனவே இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.