மித்தாலி ஓய்வுக்குப்பின் – உலககோப்பை கனவு பயணத்தை வெற்றியுடன் துவங்கிய இந்திய சிங்கப்பெண்கள், முழுவிவரம் இதோ

IND vs SL Womens Harmanpreet Kaur
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நம்பர் ஒன் வெளிநாட்டு அணிகளுடன் போட்டி போடும் வகையில் அபரித வளர்ச்சி கண்டுள்ள இந்திய ஆடவர் அணியினர் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவை அனைத்திற்கும் 1983இல் ஜாம்பவான் கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்ற உலக கோப்பையை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின் எம்எஸ் தோனி தலைமையில் 2007, 2011, 2013 ஆகிய காலகட்டங்களில் உலகக் கோப்பைகளை வென்ற இந்தியாவை பார்த்து பல இளம் வீரர்கள் உத்வேகமடைந்து கிரிக்கெட்டில் நாட்டுக்காகப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்து கொண்டே இருப்பதே உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆட்சி செலுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் இத்தனை வருடங்கள் கழித்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் மட்டும் இன்னும் லோக்கல் அணியை போலவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவது ரசிகர்களுக்கு வேதனையாக உள்ளது. ஆம் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களை தெறிக்கவிட்ட சிங்கப் பெண்களைக் கொண்ட இந்த பாரத திரு நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணியினர் இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவிக்கின்றனர். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதுபோல் திறமை இருந்தும் மறைந்து கிடப்பதால் இதுவரை இந்திய மகளிர் அணிக்கு விளையாடும் 11 வீராங்கனைகளும் வெற்றியை பெற்று கொடுப்பவர்களாக கிடைக்காததே இந்த பின்னடைவிற்கு காரணமாகி வருகிறது.

- Advertisement -

மிதாலி ஓய்வு:
ஜாம்பவான் சச்சினை போல் கடந்த 1999இல் 17 வயதில் அறிமுகமாகி 24 வருடங்கள் இந்தியாவுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனையாக சாதனை படைத்த மிதாலி ராஜ் ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் எவ்வளவோ போராடிய போதிலும் இந்தியாவிற்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியாமலேயே சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

அவர் விளையாடிய இந்த 24 வருடங்கள் கழுத்தும் இன்னும் பெரிய அளவில் முன்னேறாத இந்திய மகளிர் அணியினர் 90களில் ஆடவர் அணியினர் எப்படி விளையாடினார்களோ அதேபோல் இப்போதும் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் மிதாலி ராஜ் என மகத்தான வீராங்கனை ஓய்வுக்குப் பின் இதுநாள் வரை துணை கேப்டனாக இருந்த மற்றொரு நட்சத்திரம் ஹர்மன்பிரீட் கவூர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிரணியினர் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

- Advertisement -

அதில் ஜூன் 23இல் தம்புலாவில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் 138/6 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு அதிக பட்சமாக இளம் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஷாபாலி வெர்மா 4 பவுண்டரியுடன் 31 (31) ரன்கள் எடுக்க நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய ஜெமிமா ரோட்ரிகஸ் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 36* (27) ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 (20) ரன்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக ரணவீரா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

வெற்றியுடன் கனவுப்பயணம்:
அதை தொடர்ந்து 139 என்ற இலக்கை துரத்திய இலங்கை வீராங்கனைகள் ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்கள். அந்த அணிக்கு அதிக பட்சமாக மிடில் ஆர்டரில் 6 பவுண்டரியுடன் 47* (49) ரன்கள் எடுத்த கவிசா திலாரி கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்காக போராடினார்.

ஆனால் நட்சத்திர வீராங்கனை மற்றும் கேப்டன் சமாரி அட்டப்பட்டு உட்பட எதிர்ப்புறம் வந்த முக்கிய வீராங்கனைகள் அவருக்கு கை கொடுக்காமல் 15 ரன்களைக் கூட தாண்டாமல் அவுட்டாகி சென்றனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை 104/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் காரணமாக 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினர் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளார்கள். இந்த வெற்றிக்கு 37 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இதனால் மிதாலி ராஜ் ஓய்வுக்கு பின் முதல் உலக கோப்பை கனவு பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ள இந்திய மகளிர் அணியினர் ஜூன் 25இல் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த தொடரின் 2-வது போட்டியில் மீண்டும் இலங்கையை சந்திக்க உள்ளனர்.

Advertisement