சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒன்று. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் எவ்வளவு பெரிய தொடராக பார்க்கப்படுகிறதோ அந்த தொடரின் மினி வெர்சனாக பார்க்கப்படுவது தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர். இதனை மினி உலகக் கோப்பை என்றும் அழைப்பார்கள். அந்த வகையில் கடந்த 1998-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி இதுவரை 8 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
அந்த வகையில் கடைசியாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது தற்போது எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நாடு நடத்தும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் மூலம் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது விருப்பத்தை தெரிவிக்க இந்திய அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகிறது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாததன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. அதனைத்தவிர்த்து இருதரப்பு தொடர்களில் விளையாடுவது கிடையாது. பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வதும் கிடையாது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் வேளையில் இந்திய அணி அங்கு செல்லுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்பது குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெற்றால் நிச்சயம் இந்திய அணி பங்கேற்காது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 16 வருசத்துக்கு முன்னாடியே விராட் கோலி, ரோஹித்துக்கு செஞ்சதை மறந்துட்டு பேசாதீங்க.. கம்பீரின் பயிற்சியாளர் பேட்டி
ஆனாலும் இந்தியா விளையாடும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நாட்டிற்கோ மாற்றக்கோரி பிசிசிஐ ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க உள்ளது. அப்படி இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டால் நிச்சயம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் என்று தெரிகிறது.