ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியானது இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஐ.சி.சி யின் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்காது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் போர் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் வேளையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் அந்த வாய்ப்பு பறிபோனது.
ஒருவேளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த இறுதி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் 1 அணி என்ற மாபெரும் சாதனையை இந்திய அணி படைத்திருக்கும். ஆனால் தற்போது அந்த பொன்னான வாய்ப்பு நம் கைகளில் இருந்து நழுவி உள்ளது. தற்போதைக்கு ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீடியோ : நீ என்ன பைத்தியமா? ஹோட்டலில் சுப்மன் கில்லை கோபத்துடன் திட்டிய கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது
அதேபோன்று ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் நம்பர் 1 இடத்தை அவர்களே தக்க வைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.