
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா 2 – 0* என்றக் கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. அந்த நிலையில் இந்தத் தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் மதியம் 1.30 மணிக்குத் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 10 முறை டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக தொடர்ச்சியான டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்து இந்தியா பரிதாப சாதனை படைத்துள்ளது.
அந்தப் பட்டியலில் 2011 – 2013 காலகட்டங்களில் நெதர்லாந்து அணி 11 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து முதல் இடத்தில் இருக்கிறது. 2023 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு கடைசியாக இந்தியா டாஸ் வீசுவதில் வெற்றி பெற்றது. அப்போதிலிருந்து இந்தப் போட்டியையும் சேர்த்து 10 போட்டிகளில் டாஸ் இந்தியாவுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்காமல் இருந்து வருகிறது.
அது அடுத்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். இந்திய அணியில் இந்தப் போட்டியில் ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வுக் கொடுக்கப்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும் கடந்தப் போட்டியில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி லேசான காயத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்தப் போட்டியில் விளையாடுவதாகவும் ரோகித் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நானும் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் குவிக்க விரும்பினேன். ஏனெனில் கடந்த 2 போட்டிகளில் நாங்கள் முதலில் பவுலிங் செய்தோம். கடந்தப் போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது”
இதையும் படிங்க: என்னுடைய முதல் சம்பளத்தை நான் அப்படியே அவங்க கிட்ட குடுத்துட்டேன் – இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
“கடந்த 2 போட்டிகளில் எங்களுடைய இளம் வீரர்களின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது. அதை நாங்கள் தொடர்ந்து களத்தில் செய்ய விரும்புகிறோம். இளம் வீரர்கள் புதிது என்பதால் அவர்களிடமிருந்து அழுத்தத்தை வெளியே எடுக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்களைச் சொந்த வழியில் விளையாட விடுகிறோம். எங்கள் அணியில் 3 மாற்றங்கள் ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு. துரதிஷ்டவசமாக வருண் காயத்தை சந்தித்துள்ளார். எனவே சுந்தர், குல்தீப், அர்ஷ்தீப் அணிக்குள் வருகிறார்கள்” என்று கூறினார்.