வெறியாகும் இந்திய ரசிகர்கள்.. 20 வருடம்.. 4 மாத தோல்விகளுக்கு ஆஸியை.. இரட்டை பழி தீர்க்குமா ரோஹித் படை?

IND vs AUS CWC
- Advertisement -

உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் அனைத்து 9 அணிகளையும் தோற்கடித்து செமி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி மாபெரும் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

மறுபுறம் ஆரம்பத்திலேயே இந்தியாவிடம் தோற்று அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஆஸ்திரேலியா அதற்காக அசராமல் அதன் பின் தேவையான வெற்றிகளுடன் செமி ஃபைனல் வந்தது. அதைத்தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

வெறியாகும் 90ஸ் ரசிகர்கள்:
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா லீக் சுற்றில் தங்களுக்கு தோல்வியை பரிசளித்த இந்தியாவை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது.

ஆனால் அப்போட்டியில் 20 வருடமாக மனதுக்குள் ஆறாமல் இருக்கு காயத்திற்கு ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி பழி தீர்க்குமா என்பதை பார்க்க 80ஸ், 90ஸ் கிட்ஸ் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆம் கடைசியாக இதே ஆஸ்திரேலியாவை கடந்த 2003 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ப்ரிங் பேட்டால் அடித்தார் என்று இன்றும் 90ஸ் ரசிகர்கள் கலங்கும் அளவுக்கு கேப்டன் ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அவருடன் கில்கிறிஸ்ட் 57, மார்ட்டின் 88* ரன்கள் எடுத்ததால் 360 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே மெக்ராத் பவுன்சரில் சச்சின் அவுட்டாக சேவாக் 82 (81) ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் மறக்க முடியாத தோல்வி பரிசாக கிடைத்தது. அந்த வகையில் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா கோப்பையை முத்தமிட்டு கொண்டாடியதையும் சச்சின் டெண்டுல்கர் வெறும் தங்க பேட்டை மட்டுமே சோகமான முகத்துடன் வாங்கியதையும் இந்திய ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை.

அப்படியே கொஞ்சம் உருண்டோடி வந்தால் 2015 செமி ஃபைனலில் என்றுமே கலங்காத தோனி கண்கலங்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா தோல்வியை பரிசளித்ததை தற்காலத்து ரசிகர்கள் மறக்கவில்லை. அதை விட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் தோல்வியை பரிசளித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: எனக்கு சொல்ல வார்த்தை இல்ல.. அரையிறுதி தோல்விக்கு பிறகு மனமுடைந்த – தெ.ஆ கேப்டன் தெம்பா பவுமா

அப்போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டதை மறுக்கவில்லை. இருப்பினும் 2003இல் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற கங்குலி தலைமையிலான இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்தது. எனவே இம்முறை 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள ரோஹித் தலைமையிலான இந்தியா 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 வருட 2003 உலகக்கோப்பை ஃபைனல் மற்றும் 4 மாத 2023 டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனல் தோல்விகளுக்கு பழி தீர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வெறியாக இருக்கிறது.

Advertisement