IPL 2023 : இது ஒன்னும் பாகிஸ்தான் தார் ரோட் பிட்ச் இல்ல, இங்கிலாந்தின் விராட் கோலியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – காரணம் இதோ

Harry Brook
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட ரிக்கி பாண்டிங் போன்ற பல நட்சத்திர ஜாம்பவான்கள் கூட சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான தரத்தை கொண்டு ஐபிஎல் தொடரில் தடுமாறிய கதைகள் உள்ளது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய அவர்கள் சுழல் மற்றும் மித வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை கொண்ட இந்தியாவில் சிறப்பாக செயல்பட தடுமாறுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரர் ஹாரி ப்ரூக் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்படுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஏனெனில் 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இங்கிலாந்துக்காக அதிரடியாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதிரடியாக விளையாடி 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தான் தார் ரோட் இல்ல:
அத்துடன் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற லாகூர் அணிக்காக 8 இன்னிங்ஸில் 264 ரன்களை 171.4 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் 4 சதங்கள் உட்பட 809 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதனால் டி20 கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹரி ப்ரூக் வருங்காலங்களில் இந்தியாவின் விராட் கோலியை போல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடந்த டிசம்பரில் வெளிப்படையாக பாராட்டியது பின்வருமாறு.

“அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எல்லா இடங்களிலும் அசத்தக்கூடிய ஒரு அரிதான வீரர் ஆவார். விராட் கோலி போன்ற வீரர்களில் ஒருவரான அவருடைய மிகவும் எளிமையான டெக்னிக் அனைத்து இடங்களிலும் கச்சிதமாக வேலை செய்யும். குறிப்பாக எதிரணி மீது அவர் போடும் அழுத்தம் தான் நாங்கள் விரும்பக்கூடிய ஒன்றாகும்” என்று கூறினார். அதனால் அவருடைய மதிப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்த காரணத்தால் 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக 13.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் வெறும் 13 (21) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி இந்தியாவின் சஹாலின் சுழலில் கிளீன் போல்டான அவர் லக்னோவுக்கு எதிரான 2வது போட்டியிலும் இளம் இந்திய ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் சுழலில் 3 (4) ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றார். மொத்தத்தில் இதுவரை 2 போட்டிகளில் வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் ஹைதராபாத் அடுத்தடுத்த தோல்விகளை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து எதிர்பார்ப்பை விட மோசமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் திணறுவார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் சான்றாகவும் ஹரி ப்ரூக் அமைந்துள்ளார் என்றே சொல்லலாம். அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக அடிப்பதற்கு இது ஒன்றும் தார் ரோட் போல பிளாட்டான பிட்ச்களை கொண்ட பாகிஸ்தான் கிடையாது என்று சமூக வலைதளங்களில் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சச்சினுக்கு அடுத்து தோனிக்கு தான் ரசிகர்கள் இப்படி எல்லாம் பண்றாங்க – கைரன் பொல்லார்டு கருத்து

ஏனெனில் கடந்த ஒரு வருடமாகவே பாகிஸ்தானில் இருந்த பிட்ச்கள் வேகம், சுழல் என எதற்குமே சாதகமாக இல்லாமல் தார் ரோட் போல் இருந்தது உலக அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதில் சரமாரியாக அடித்து நொறுக்கி பெயர் பெற்ற ஹரி ப்ரூக் தற்போது தரமான பிட்ச்களை கொண்ட இந்தியாவில் தடுமாறுவதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் என்னதான் திறமையை கொண்டிருந்தாலும் அதற்குள் 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு இன்னும் அவர் எதையும் சாதிக்கவில்லை என்றும் இங்கிலாந்தினருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement