பெஸ்ட் வைட் பால் டீம்னு சொன்னாங்க என்னாச்சு – 11 வருடம் கழித்து பரிதாபத்தை சந்தித்த இங்கிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள்

AUS vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ந்து அங்கேயே இருந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பட் கமின்ஸ் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஏற்கனவே கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 355/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் சதமடித்து 152 ரன்களும் டேவிட் வார்னர் சதமடித்து 106 ரன்களும் விளாசி 269 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

அதை தொடர்ந்து 356 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் 33, டேவிட் மாலன் 2, ஜேம்ஸ் வின்ஸ 22, மொய்ன் அலி 18, கேப்டன் பட்லர் 1 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஆரம்ப முதலே தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவிடம் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றார்கள். அதனால் 31.4 ஓவரிலேயே வெறும் 142 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக சரித்திர சாதனை படைத்து 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

- Advertisement -

பெஸ்ட் வைட் பால் டீம்:
அத்துடன் டி20 உலக கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை பழி தீர்த்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அடித்து துவைத்து நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் உலகக் கோப்பையை வென்றே மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து தாயகம் திரும்பினாலும் 2011க்குப்பின் 11 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்த பரிதாபத்துடன் கிளம்பியது.

முன்னதாக கடந்த 2019 உலகக் கோப்பை வென்று சாம்பியனாக திகழும் இங்கிலாந்து தற்போது 20 ஓவர் கோப்பையையும் வென்று கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சரித்திரத்தை படைத்தது. ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினாலும் கடந்த 2017இல் இயன் மோர்கன் வருகைக்கு பின் அதிரடி படையாக மாறி இப்படி அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்து உலகிலேயே தற்சமயத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதர அணிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

- Advertisement -

அதனால் அந்த அணியை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பின்பற்றுமாறு நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஐபிஎல் தொடரை நடத்தியும் 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் இந்தியா காலம் கடந்த பழைய யுக்தியை கடைப்பிடித்து வருவதாக தெரிவித்த மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் வெட்டி வீராப்பை விட்டுவிட்டு தங்களது நாட்டை பின்பற்றுமாறு கடந்த வாரம் விமர்சித்திருந்தார்கள். அந்த நிலைமையில் 11 வருடங்கள் கழித்து இப்படி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்துள்ள நீங்கள் சமீப காலங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறீர்கள் என்பதற்காக அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசலாமா என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

குறிப்பாக என்னதான் ஜானி பேர்ஸ்டோ போன்ற சில முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்றாலும் டி20 உலக கோப்பையை வென்ற அதே சாம்பியன் அணி தானே இந்த ஒருநாள் தொடரில் விளையாடியது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் அப்படி இருந்தும் ஏன் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். எனவே சமீப காலங்களில் செயல்படுகிறீர்கள் என்பதற்காக இந்திய கிரிக்கெட்டை கிண்டலடிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் நாங்கள் 1983லேயே உங்களது நாட்டில் முரட்டுத்தனமான வெஸ்ட் இண்டீஸை சாய்த்து கோப்பை வென்றதுடன் 2013இல் உங்களையே சொந்த மண்ணில் மண்ணைக் வைத்து சாம்பியன் பட்டம் வென்ற சரித்திரம் கொண்டவர்கள் என்றும் பெருமை கொள்கிறார்கள்.

Advertisement