இவருக்கு எண்டே கிடையாதா? எத்தனை நாள் தான் 10 பேரோட விளையாடறது – சொதப்பல் மன்னன் மீது ரசிகர்கள் கோபம்

KL Rahul Lungi Nigidi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தன்னுடைய முதலில் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்த இந்தியா அக்டோபர் 30ஆம் தேதியன்று 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும் என்ற நிலைமையில் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா 15 (14) கேஎல் ராகுல் 9 (14) விராட் கோலி 12 (11) தீபக் ஹூடா 0 (3) ஹர்டிக் பாண்டியா 2 (3) என முக்கிய வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 49/5 என திண்டாடிய இந்தியா 100 ரன்கள் கடக்குமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது தினேஷ் கார்த்திக்க்குடன் கை கோர்த்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார். ஆனால் அதில் கடைசி வரை அதிரடியை துவக்காத தினேஷ் கார்த்திக் 6 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மறுபுறம் வேறு ஏதோ பிட்ச்சில் பேட்டிங் செய்வது போல் அசத்திய சூரியகுமார் மட்டும் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குறித்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றி அவுட்டானார்.

- Advertisement -

தடவல் மன்னன்:
அந்தளவுக்கு துல்லியமாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 134 ரன்களை துரத்திய அந்த அணிக்கு குயின்டன் டீ காக் 1 (3) ரிலீ ரோசவ் 0 (2) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அர்ஷிதீப் சிங்கிடம் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க கேப்டன் பவுமா 10 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 24/3 என தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக டேவிட் மில்லருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஐடன் மார்க்கம் 52 (41) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய மில்லர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (46) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 137/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா குரூப் 2 புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபடியும் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடினாலும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய இந்தியா முதல் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. இதனால் எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் சூரியகுமார் தவிர்த்து ஏனைய வீரர்கள் சொதப்பியது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சமீப காலங்களில் எந்த போட்டியிலுமே சிறப்பாக செயல்படாத கேஎல் ராகுல் மீண்டும் 9 (14) ரன்களில் அவுட்டாகி சென்றது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் திறமை இருந்தும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவோ அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்டு தடவும் அவர் குறைவான ரன்களில் அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக காயத்திலிருந்து திரும்பிய பின் துணை கேப்டன் என்ற பொறுப்பின்றி ரொம்பவே மெதுவாக விளையாடும் அவர் இப்போட்டியில் குறைந்தது 15 – 20 ரன்களை அதிரடியை எடுத்துக் கொடுத்திருந்தால் கூட கடைசி ஓவர் வரை போராடிய இந்திய பவுலர்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால் 2019 உலகக் கோப்பை அரையிறுதி, 2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 அழுத்தமான போட்டிகள் உட்பட தனது வாழ்நாளில் இதுவரை களமிறங்கிய அத்தனை பெரிய போட்டிகளிலும் சொதப்பிய அவர் கத்துக்குட்டிகளை அடித்து பெரிய பெயரை வாங்கி காலத்தை தள்ளிவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவராலேயே இந்த உலக கோப்பையில் எந்த போட்டியிலுமே இந்தியா 20 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பெறவில்லை. மேலும் பந்து வீச தெரியாத அவர் ஃபீல்டிங்கிலும் அவ்வப்போது சொதப்புவதால் எத்தனை நாட்கள் 10 பேரை வைத்துக் கொண்டு விளையாடுவது என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இப்படி தடவலாக பேட்டிங் செய்யும் கதைக்கு முடிவே கிடையாதா என்று சமூக வலைதளங்களில் கோபமடையும் ரசிகர்கள் அடுத்து வரும் போட்டிகளிலாவது அவரை அதிரடியாக நீக்குமாறு காட்டத்துடன் பேசுகின்றனர்.

Advertisement